
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்பவர்களுக்கு விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல விசா கட்டாயமான தேவையாக இருக்கிறது. சுற்றுலா வேலைக்கு மற்றும் படிப்பு, மருத்துவ தேவை என்று எந்தவித தேவைக்காக வெளிநாடுகளுக்கு சென்றாலும் விசா எடுத்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
இந்த நிலையில் இலங்கை அமைச்சரவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என்று அறிவித்திருக்கிறது. இலங்கையினுடைய அந்நிய செலாவணியை உயர்த்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் இது போன்ற முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இனி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் விசா எடுக்க தேவையில்லை. மேலும் இது சோதனை முயற்சியாக மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சோதனை முயற்சி பயன் அளிக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் இந்த நடைமுறையை தொடர்ந்து செய்யவும் இலங்கை அரசு திட்டமிட்டு இருக்கிறது.
மேலும் சீனா, ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களும் இனி விசா எடுக்க தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு செல்வது மிகவும் எளிய காரியமாக மாறி இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையினுடைய அருகாமை நாடுகளுடன் வர்த்தக தொடர்பு மேம்படும், சுற்றுலா விரிவடையும் என்று இலங்கை வெளியுறவு துறை தெரிவிக்கிறது.