திருமுருகன், சண்முகன், கந்தா, கடம்பா, கார்த்திகேயன், எனப் பல நாமங்களில் பிரியமுடன் அழைக்கப்படும் தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்த நாள்தான் வைகாசி விசாகம். முருகப்பெருமான் அவதரித்த விசாகம் எனும் நட்சத்திரம் வரும் வைகாசி மாதத்தின் பவுர்ணமி நாளையே நாம் வைகாசி விசாகத் திருவிழாவாக கொண்டாடுகிறோம். மேலும் கிருத்திகை பூசம் விசாகம் எனும் நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களாக உள்ளது. இவைகள் மூன்றும் இணைந்து வரும் வைகாசி பவுர்ணமியே முருகனை நினைத்து விரதம் இருக்க ஏற்ற நாளாகிறது. இந்த வருடம் ஜூன் இரண்டாம் தேதி (நேற்று) காலை துவங்கி மூன்றாம் தேதி (இன்று) காலை வரை விசாக நட்சத்திரம் இருக்கிறது.
முருகன் அவதரித்த நாளும் இதுவே என்கிறது புராணங்கள். வைகாசி விசாகத்தின் நாயகனான முருகனின் சிறப்புகள் பற்றியும் விசாகத்தின் மகிமைகள் குறித்தும் சில தகவல்களைப் பார்ப்போம்.
தாமரை போன்று சிவந்த அழகிய திருவடிகளும், பவளம் போன்ற செம்மையான மேனியும், குன்றிமணி போன்ற சிவந்த ஆடையும் அணிந்த சேவல் கொடியுடையோனான முருகன் காப்பதாலேயே இவ்வுலகு நலம் பெற்றுத் திகழ்கிறது என சங்கத்தமிழ் நூலான குறுந்தொகை முருகனின் பெருமையை நவில்கிறது.
நம் சமகாலத்து மகானான வள்ளலார் அநேக தெய்வங்கள் இருந்தும் முருகப்பெருமானையே அருட்பெருஞ்ஜோதி யாக கண்டு மனம் ஒன்றினார். "அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும். அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்" என தீபஒளியில் முருகனை கொண்டாடினார்.
முப்பெருந்தெய்வங்களில் முதல்வரான சிவபெருமானின் ஐந்து திருமுகங்களையும் அன்னை பார்வதியின் ஒரு திருமுகத்தையும் தன்னுள் இணைத்து ஆறுமுகங்களுடன் விளங்கும் ஷண்முகன் சிவசக்தியின் அம்சமாகவே விளங்குகிறார்.
முருகனின் வரலாறு மனித இனத்தின் கோட்பாடுகளான வீரம் பாசம் இல்லறம் மொழிப்பற்று நட்பு கருணை போன்ற பலவற்றை உள்ளடக்கி நம்மை உள்ளார்ந்த நம்பிக்கையுடன் வழிபட வைக்கிறது. இவற்றிற்கு சான்றாகத் திகழ்கின்றன. முருகனின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலங்களான அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை.
முருகனின் மேல் அளப்பரிய பக்தி கொண்ட மறைந்த கிருபானந்தவாரியார் அவர்கள் முருகா என்பதற்கான அர்த்தமாக கூறியது இது. “"மு" என்றால் முகுந்தன் "ரு' என்றால் ருத்ரன் "கா" என்றால் பிரம்மா வாக முப்பெரும் தெய்வங்களின் பிரதிநிதியாக முருகா என்றழைப்பவரின் கவலைகளை தீர்க்கும் தெய்வமாகிறார் முருகப்பெருமான். ஆகவே முழு மனதுடன் முருகனை நம்புங்கள் நல்லதே நடக்கும்.“
வீரமும் விவேகமும் ஞானமும் நிறைந்த ஆறுமுகனுக்கு பன்னிரண்டு திருக்கரங்கள். வலப்புற கரங்களில் அபயமளிக்கும் கையும் , கோழிக்கொடி, அங்குசம், அம்பு, வேல், வஜ்ஜிரம் போன்ற ஆயுதங்களையும், இடப்புறம் உள்ள கரங்களில் வரமளிக்கும் கையும், தாமரை மலர், மணி, மழு, வில், தண்டாயுதம் போன்றவைகளையும் ஏந்தி அரக்கனை வென்ற தேவர்களின் சேனாபதியாக கம்பீர அழகுக்கு சொந்தக்காரர் முருகன்.
இதே பன்னிரண்டு திருக்கரங்களில் இருகைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது. நான்காவது கை ஆபத்தில் உள்ள பக்தரைக் காத்து ரட்சிக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் எதிரியை நோக்கி வேலை சுழற்றுகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு உறவாடுகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்க வைத்து அருளோசையை எழுப்புகிறது. பதினோராவது கை மழையை அருளி வளம் தருகிறது. பன்னிரெண்டாவது கை மணமாலையை சூட்டுகிறது. என்றெல்லாம் முருகனின் பெருமைகளை விவரிக்கிறது கந்தனைப் பற்றிய வரலாறுகள்.
வேல் கொண்டு வினைகள் தீர்க்கும் வேலவனுக்கும் முருகன் அவதரிக்க காரணமான சிவனுக்கும் முக்கிய தினமாகவே விசாகம் அமைகிறது. திருமழப்பாடி எனும் ஊரில் மழு எனும் ஆயுதம் ஏந்தி சிவபெருமான் நடனம் ஆடிய நாள் வைகாசி விசாகம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்ற அருளாளரான வள்ளலார் வடலூரில் சத்யஞான சபையை நிறுவியது வைகாசி விசாகத்தன்றுதான்.
மகான் புத்தர் அவதரித்த நாளும் இதுவே. போதி மரத்தடியில் ஞானம் பெற்ற நாளும், பரிநிர்வாணம் அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்றே. திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் விசாகத்தன்றே. தேவர்களின் அரசனான இந்திரன் வலிமை இழந்த நேரத்தில் சுவாமிமலை முருகனை வணங்கி வழிபட்டு மீண்டும் வலிமை பெற்றது ஒரு விசாக தினத்தில்தான்.
இது போன்ற பல தெய்வீக சிறப்புகளைப் பெற்ற அற்புத நாள்தான் வைகாசி விசாகம். இத்தனை மகிமை பொருந்திய விசாகத்தில் மனதார முருகனை நினைத்து அவன் அருளை வேண்டினால் தமிழ் மூதாட்டியான அவ்வைக்கு கனிவுடன் மண் படிந்த சுட்ட பழத்தை ஊதி மண்ணைத் தீர்த்து பசி போக்கிய கந்தன் நம் கவலைகளையும் தீர்த்து நிம்மதி தருவான்.