கதறி அழுத சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விளாடிமிர் புதின்.

கதறி அழுத சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விளாடிமிர் புதின்.
Published on

சுற்றுப்பயணத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பார்க்க முடியாமல், கதறி அழுத 8 வயது சிறுமியின் காணொளி இணையத்தில் பரவியதால், அச்சிறுமிக்கு அதிபர் விளாடிமிர் புதின் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 16 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில், இன்னும் அது முடிவுக்கு வந்த பாடில்லை. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என விளாடிமிர் புதின் போட்ட திட்டம் கை கூடவில்லை. இதற்கிடையே ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தது. இது ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருந்தாலும், முடிந்தவரை அவர்களும் சமாளித்து வருகிறார்கள். 

இந்நிலையில், சமீபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ரஷ்யாவின் தனியார் ஆர்மி என அழைக்கப்படும் 'வாக்னர்' என்ற கூலிப்படைக் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக களம் இறங்கியது. இந்தக் குழுவினர் புதினுக்கு சிக்கலை ஏற்படுத்தினர். இருப்பினும் இவர்களால் பெரிய புரட்சி வெடிப்பதற்கு முன்பே, அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது. இதனால் ரஷ்யாவில் ஏற்படவிருந்த உள்நாட்டுப் போர் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து ரஷ்யாவின் கீழுள்ள தாகெஸ்தான் குடியரசுக்கு விளாடிமிர் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரைப் பார்க்க 8 வயது சிறுமியான 'ரைசாட் அகிபோவா' என்பவர் சாலையில் காத்திருந்தார். ஆனால், அச்சிறுமையால் புதினைப் பார்க்க முடியவில்லை. அதிபர் புதினைப் பார்க்க முடியாமல் போனதை நினைத்து அவர் கதறி அழுதார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதால், அச்சிறுமியைப் பார்க்க புதின் முடிவு செய்தார். 

எனவே, அந்த சிறுமியை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு வரவழைத்து, புதினை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டது. அதிபர் மாளிகையில் முதல் முறை விளாடிமிர் புதினைப் பார்த்தவுடன் சிறுமி சிரித்தபடியே ஓடிச்சென்று அவரைக் கட்டியணைத்தார். பின்னர் புதின், அச்சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். 

அதன் பிறகு திடீரென ரஷ்ய நிதி அமைச்சருக்கு போன் போட்டு, இந்த சிறுமி வசிக்கும் தாகெஸ்தான் குடியிருப்புக்கு திட்ட மானியம் வழங்கும்படி கூறினார். இதை அந்த சிறுமியிடமே கூறி, நிதியமைச்சரிடம் கூடுதலாக நிதி தரும்படி கேட்க வைத்தார். அதிபர் சொல்லியபடியே மழலை மொழியில் சிறுமியும் கேட்க, கூடுதல் நிதியுதவி வழங்க நிதியமைச்சர் ஒப்புக்கொண்டார். 

இதன் மூலம் தாகெஸ்தான் குடியரசுக்கு 5 பில்லியன் ரஷ்யப் பணம் கூடுதல் நிதியாகக் கிடைத்துள்ளது. பின்னர், இவர்கள் இருவரும் சந்தித்த காணொளியும் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com