

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர்கள் 26.95 லட்சம் பேர், இரட்டைப் பதிவு கொண்டவர்கள் 3.98 லட்சம் பேர் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்த அல்லது குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.44 லட்சம் பேர் அடங்குவர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டது அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக 18 வயது பூர்த்தியானவர்கள் பெயர் சேர்க்க ஏதுவாக, கடந்த டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இருப்பினும், இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்ட 66 லட்சம் பேருடன் ஒப்பிடும்போது, தற்போது வரை வெறும் 12.80 லட்சம் பேர் மட்டுமே பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதாவது, இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான கால அவகாசம் நேற்றோடு (ஜனவரி 18) நிறைவடைந்தது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17-ம் தேதியன்று தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 நாட்கள் கால அவசாகம் நீட்டிப்பு.