‘நாங்க பாவ யாத்திரைன்னா திமுக பாவக்கடல்’ வானதி சீனிவாசன் பதிலடி!

‘நாங்க பாவ யாத்திரைன்னா திமுக பாவக்கடல்’ வானதி சீனிவாசன் பதிலடி!
Published on

டுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் இந்த பாத யாத்திரையை 'பாவ யாத்திரை' என விமர்சித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி இருக்கும், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மக்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவில் புதிய நபர்களை சேர்ப்பதற்கும், மாநிலம் முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்கும் இந்த பாத யாத்திரை பெரிதும் பயன்படும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருவதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதன் வெளிப்பாடாகவே, பாஜகவின் இந்த பாத யாத்திரையை, ‘பாவ யாத்திரை’ என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக தினம் தினம் செய்து கொண்டிருக்கும் பாவத்தை அளவு எடுத்தால், முதல்வரெல்லாம் 'பாவம்' என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் கடைகள் மூலமாக எத்தனை பெண்களின் பாவங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

இப்படி திமுக செய்யும் பாவங்களை கணக்கிட்டால் அது பெரிய பாவக் கடலாக தான் இருக்கும். நாங்க பாவ யாத்திரை என்றால் திமுக ஒரு பாவக்கடல். அந்தப் பாவக்கடலில் மூழ்கப்போகும் முதல் நபர் நமது முதலமைச்சர் ஸ்டாலினாகத்தான் இருப்பார்” என்று வானதி சீனிவாசன் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com