
இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றுவதில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வப்போது தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சில பயிற்சிகளையும் தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் மூலிகைப் பொருட்களில் இருந்து அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சியை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இளைஞர்களுக்கு வழங்கவுள்ளது. இந்தப் பயிற்சி சென்னையில் வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அழகு சாதனப் பொருட்களின் மீதான மோகம் அதிகமாகவே உள்ளது. சந்தையில் எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் விற்பனையானாலும், அதிலிருக்கும் இயற்கையான குணம் குறைந்து விட்டது. இயற்கையில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களில் இருந்து அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்தால், அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, இயற்கையான முறையில் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்க இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இளைஞர்களை தொழில்முனைவோர்களாக மாற்றவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் அவ்வப்போது தொழில் மற்றும் தயாரிப்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போது தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் மூலிகை அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சியை இளைஞர்களுக்கு வழங்கவிருக்கிறோம். இந்தப் பயிற்சி செப்டம்பர் 17 முதல் 19 வரை, தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் நடைபெறும்.
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் தங்குவதற்கு குறைந்த விலையில் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தங்குமிடம் வேண்டுவோர் முன்னரே தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். 18 வயது பூர்த்தியடைந்த ஆண்/பெண் இருபாலரும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பயிற்சி கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
இந்தப் பயிற்சியில் ஆயுர்வேத சோப்பு, மூலிகை சோப்பு, தேங்காய் எண்ணெய் சோப்பு, தலைமுடி வளரும் ஷாம்பு, தலைமுடி வளரும் எண்ணெய், கை கழுவும் திரவம் மற்றும் பேஸ் வாஷ் ஜெல் உள்ளிட்ட பல அழகு சாதனப் பொருட்களை எப்படி தயாரிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்படும். சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். மேலும் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக முகவரி:
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.
தொடர்புக்கு: 93602 21280 / 86681 02600 / 044-22252085.