நெட்பிளிக்ஸ் நிறுவனம் கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின்ஆகிய நான்கு நாடுகளில் தங்கள் நிறுவனம் அளித்த பாஸ்வேர்ட்டை பகிர்ந்தளிக்க தடை செய்துள்ளது. எல்லோருமே பாஸ்வேர்ட்களை பகிர்வதால், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது என்கிற காரணத்தால் 4 நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடை செய்வதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா இணையவில்லை என்பது தற்போதைய ஆறுதல். ஆனால் பின்னர் இந்த தடையை இந்தியா போன்ற நாடுகளிலும் கொண்டு வர வாய்ப்புள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் ப்ரொடெக்ட் இன்னோவேஷனின் இயக்குனரான (Director of Product Innovation) செங்கி லாங், "100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தங்களுடைய நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்களை பகிர்ந்து கொள்கின்றன. இது சிறந்த திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் முதலீடு செய்யும் எங்களது திறனை பாதிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இனி இந்த தடைகள் மூலம் நெட்பிளிக்ஸில் உள்ள திரைப்படங்கள், வெப்சீரீஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து வந்தவர்களின் தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கிபோட்டுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். ஆனால் பணம் செலுத்தி பார்க்கும் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட பாஸ்வேர்ட் ஷேரிங் (Password Sharing) மீதான தடையை தற்போது தான் ஒருவழியாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கூட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை 4 நாடுகளுடன் நின்று விடப் போவதில்லை. மேற்கண்ட புதிய மாற்றங்கள் மற்ற நாடுகளிலும் வரும் மாதங்களில் பரவலாக வெளியிடப்படும் என்றுஎதிர்பார்க்கப் படுகிறது.
மேற்குறிப்பிட்ட 4 நாடுகளில், அதாவது கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும்ஸ்பெயின் ஆகிய இந்த நாடுகளில் உள்ள நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், நெட்பிளிக்ஸ் வழியாக தங்களது ப்ரைமரி லோக்கேஷனை(Primary Location) செட் செய்யும் படி கேட்டுக் கொள்ளப் படுவார்கள்.
ப்ரைமரி லோக்கேஷன் உடன் சேர்த்து, ஒரு அக்கவுண்ட்டின் உண்மையான உரிமையாளருக்கு குறிப்பிட்ட அக்கவுண்ட்டை அணுகக்கூடிய மெம்பர்களை நிர்வகிக்க உதவும் 'மேனேஜ் அக்செஸ் அண்ட் டிவைசஸ்' (Manage Access and Devices) என்கிற புதிய பக்கமும் அணுக கிடைக்கும்.
இருப்பினும் அக்கவுண்ட்டின் உண்மையான உரிமையாளர், மெம்பர்களின் லாக் இன்-ஐ அங்கீகரிக்க வேண்டும். மேலும் அக்கவுண்ட்டின் மெம்பர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஹோம் நெட்வொர்க்குடன் கனெக்ட் ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தங்களது அக்கவுண்ட்டை இழக்க நேரிடும்.
இந்த பகிர்தல்களால் முதலீடுகள் பாதிக்கப்படும் என்பது ஒருபக்கம் இருக்க, பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடுப்பதன் மூலம் அல்லது நிறுத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 30 மில்லியன் பயனர்களின் வழியாக கிடைக்கும் 721 மில்லியன் டாலர்கள் என்கிற வருவாயை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் இழக்க நேரிடும் என்று கோவன் ஆய்வாளர்கள் (Cowen Analysts) மதிப்பிட்டுள்ளனர். எது எப்படியோ இனி நெட்ப்ளிக்ஸ் பணம் கட்டினால் மட்டுமே காண முடியும்என்கின்றனர் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தினர்.