

மும்பை பைதானி பகுதியில் வசித்து வந்தவர் அப்துல்லா அப்துல் காதர் (40) , அவரது மனைவி நஸ்ரின் (35) , அவரது இரு மகள்கள் ஆயிஷா(16) மற்றும் ஜீனப் (13). மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் ஒரு தர்பூசணி வினையாக உள்ளே வந்துது.
சனிக்கிழமை (ஏப்ரல்.25) இரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அப்துல்லா குடும்பத்தினர் பிரியாணி விருந்து சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு நள்ளிரவில் தர்பூசணி பழத்தினை அப்துல்லா குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் இருந்து அந்த குடும்பத்தினர் ஒருவர் மாற்றி ஒருவர் வாந்தி எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் நிலைமை மோசமாகி மயங்கி உள்ளனர். அவர்கள் நிலையை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி அந்த குடும்பத்தில் ஒவ்வொருவராக 12 மணி நேர இடைவெளியில் 4 பேரும் உயிரிழந்தனர் .இந்த சம்பவம் மும்பை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , அவர்களுடன் உணவு அருந்திய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் அவர்களுடன் இரவு விருந்தில் பிரியாணி சாப்பிட்ட அனைவரும் நலமாக இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் சாப்பிட்ட விருந்து உணவில் எந்த ஒரு நஞ்சும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட அப்துல்லா குடும்பத்தினர் மட்டுமே மரணமடைந்தது, காவல்துறையினரை வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது. அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி நஞ்சாக மாறி இருக்கலாம் , என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடந்து வருகிறது.
அங்கு சாப்பிட்டு மிச்சம் இருந்த தர்பூசணி பழத்தின் மாதிரிகளை சேகரித்த காவல்துறையினர் அதை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடற்கூறுகள் சோதனைகளுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் முடிவை வைத்தே அப்துல்லா குடும்பத்தினர் உயிரிழந்த காரணம் வெளிவரக்கூடும்.
இயற்கையில் நஞ்சாகாத தர்பூசணி பழம் எவ்வாறு விஷமாக மாறி இருக்கும்? என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அசைவம் சாப்பிட்ட பின் இந்த பழம் சாப்பிடுவது சரியா? என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. தற்போது தர்பூசணி உள்ளிட்ட ஒரு சில பழங்களில் நிறத்தினை அதிகரிக்க ஊசி போன்றவற்றின் மூலமாக வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என்று காவல் துறை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளது.
கோடைக்காலத்தில் வெட்டி வைக்கப்படும் பழைய பழங்கள் மற்றும் பழைய உணவு உணவு வகைகளை உண்ணும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் . இந்த உயிர்பலி சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் முடிவில் தான் இவர்கள் உண்மையிலேயே தர்பூசணி பழம் சாப்பிட்டதால் மரணம் அடைந்தார்களா? அல்லது இந்த சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரிய வரும். தற்போது மும்பை பகுதிகளில் தர்பூசணி சாப்பிட நினைப்பவர்கள் சற்று அச்சத்துடன் இருக்கின்றனர்.