ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் இல்லத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எங்கள் தரப்பு போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கான முழு உரிமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடுவேன் என்று கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் உறுதியாக ஆதரிப்போம். எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்க எடப்பாடியார் தான் காரணம். எப்போதும் இரட்டை இலை சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தான் தற்போது வரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் 2026ம் ஆண்டு வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி அளித்துள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. எங்களிடம் கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டு தான் உள்ளன. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை இரட்டை இலை சின்னம் ஒதுக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.