
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒன்றை ஹமாஸ் தலைவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து மோசமான தாக்குதல் நடத்தியதாலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் படையினர் மீது போரைத் தொடுத்தது. எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் இஸ்ரேல் காசாவுக்குள் நுழைந்து, சரமாரி தாக்குதல்களில் ஈடுபட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
மருத்துவமனை என்று கூட பாராமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. உலகின் பல நாடுகள் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஹமாஸ் குழுவின் தலைவரான இஸ்மாயில், இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெலிகிராம் தளம் ஒன்றில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் பேச்சு வார்த்தை சுமுகமான நிலையை எட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய கருத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த போர் நிறுத்தம் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும், இஸ்ரேல் போரை நிறுத்தினால் அதற்கு பதிலாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்ற பிணையக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களை விடுவிக்க முடியாது என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.