
காசா மீது பலமுனைத் தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம். ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதே எங்களது நோக்கமாகும் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரியான லெப். ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மீது தாக்குதலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசியல் தலைமை உத்தரவிட்டதும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். தாக்குதல் நடத்துவதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 220 பேர் இருப்பிடம் பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு நிதியுதவியும் பாதுகாப்பும் வழங்கப்படும். அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்ச்சூழல் நீடித்து வருவதால் 16 வது நாளாக பதற்றம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தரைவழித் தாக்குதலை நடத்துவது குறித்து இஸ்ரேல் முடிவு செய்யலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் உரையாடியபோது பைடனிடம், காசா மீதான தரைவழித் தாக்குதலை தாமதப்படுத்துமாறு இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டுள்ளீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “தரை வழி தாக்குதல் பற்றி இஸ்ரேலே முடிவு செய்துகொள்ளலாம்” என்று அவர் பதிலளித்தார்.
இதனிடையே பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவியாக மனிதாபிமான அடிப்படையில் 38 டன்கள் மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதியான ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசாவிலுள்ள சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வது நமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். காசா பகுதியில் போர் முடிவுக்கு வந்து அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா நகரம் மீது நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 4,500 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.