அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க.வின் கண்டன தீர்மானத்தை எதிர்க்கிறோம் - கரு.நாகராஜன்!

அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க.வின் கண்டன தீர்மானத்தை எதிர்க்கிறோம் - கரு.நாகராஜன்!
Published on

பா.ஜ.க தமிழ் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டிக்கிறோம் என பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழலில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கவேண்டுமா என்பது குறித்து மறுபரீசிலினை செய்யப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுலவகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு எதிராக அதிமுக சார்பில் ஒருமனதாக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை. சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் அபத்தமானது, பேசிய பிறகு அவர் என்ன பேசினார் என்று அவருக்கே தெரியாது. எங்கள் தலைவர் பற்றி தவறாக பேசிய அதிமுக தலைவர்கள் மீதுதான் அக்கட்சியினர் கண்டன தீர்மானம் நிறைவேற்றி இருக்கவேண்டும். ஆனால், அதற்கு மாறாக எங்கள் தலைவர் அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்கள் மாநில தலைவரை தனிமைப்படுத்தி அதிமுக சார்பில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிரானவர். அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல..அவர் தனி திட்டங்களுடன் செயல்படுவதில்லை. எங்கள் தலைவர் அண்ணாமலையை பொருத்தவரையில் சேவைதான் அவரின் நோக்கம். அதுதான் எங்கள் கட்சியின் நோக்கமும்கூட.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம். ஏன் அதைபற்றி அதிமுகவினர் பேசுவதில்லை. அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு நேரடியாக எங்கு பேசியுள்ளார். அப்படி அவர் பேசதா விஷயத்தை வைத்து அதிமுகவினர் அம்மாவின் பெயரில் அரசியல் செய்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பாஜக என்றும் மரியாதை கொடுக்கும். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தேசிய பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசும் அதேநேரத்தில் மாநில பாஜகவை தலைவரை இகழ்ந்து பேசுவதை சரியில்லை. எங்கள் தலைவரை இகழ்ந்து பேசிய அதிமுக சி.வி.சண்முகம் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

பாஜகவினர் ஊழலுக்கு எதிரானவர்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவுச் செய்வார்கள். 2024 தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com