நாங்களும் யாத்திரை நடத்துவோம்!

நாங்களும் யாத்திரை நடத்துவோம்!

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத்தில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதுடன் அதிக இடங்களில் வென்று சாதனையும் படைத்தது.

இமாச்சலத்தில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தாலும், கணிசமான இடங்களில் வென்றுள்ளது. இது தவிர தில்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்ற கருத்து கணிப்புகளையும் மீறி, ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தாலும் 104 வார்டுகளை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு கர்நாடகம், திரிபுரா, மத்தியப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளையும் பிராசரத்தையும் முடுக்கிவிட்டது.

குஜராத் தேர்தல் முடிவுகள் 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். 2023 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களிலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிப்போம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறிவருகிறார்.

இதனிடையே திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முகமாக ஜனவரி 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ரதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு “ஜன விஸ்வாஸ் யாத்திரை” என பெயரிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதி மாவட்டம் தர்மாநகரில், இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 5 இல் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். அன்றைய தினமே தெற்கு திரிபுராவில் சப்ரூம் என்னுமிடத்தில் பேரணி, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராஜீவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

8 நாள் நடைபெறும் இந்த ரத யாத்திரை 12 ஆம் தேதி முடிவடைகிறது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார். முதல்வர் மானிக் சகா, துணை முதல்வர் ஜிஷ்ணுதேவ் வர்மா, முன்னாள் முதல்வர் விப்லவ் குமார் தேவ் உள்ளிட்டோரும் இதில் பேசுகின்றனர்.

மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் இந்த ரத யாத்திரை நடைபெறும். மத்திய, மாநில அரசுகளின் நல்வாழ்வு திட்டங்கள் மற்றும் சாதனைகள் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். 200-க்கும் மேலான பேரணிகள், 100-க்கும் மேலான கூட்டங்கள் நடத்தப்படும். மத்திய அமைச்சர்கள்,

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்றார் பட்டாச்சார்யா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com