தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி பா.ஜ.க.வுக்கு எங்கள் பலத்தை காட்டுவோம்: சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி பா.ஜ.க.வுக்கு எங்கள் பலத்தை காட்டுவோம்: சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜ.க. - சிவசேனை கூட்டணியில் அதிரடியாக சேர்ந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி பா.ஜ.க.வுக்கு நாங்கள் யார் என காட்டுவோம் என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சதாரா மாவட்டம், கராட்டில் குருபூர்ணிமாவை முன்னிட்டு தமது அரசியல் குருவும் மகாராஷ்டிரத்தின் முதல் முதலமைச்சருமான யஷ்வந்த்ராவ் சவான் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத் பவார், பின்னர் ஆதாரவாளர்கள் புடைசூழ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகளை அழித்துவிட பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பி எங்கள் பலத்தை காட்டுவோம்.

இன்று மகாராஷ்டிரத்திலும், நாட்டிலும் மதத்தின் பெயரால், வகுப்பின் பெயரால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். சிலர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி அதை அழிக்க நினைக்கின்றனர். ஆனால், நாங்கள் மீண்டு எழுந்து அவர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவோம்.

வகுப்பு வாதத்துக்கு எதிரான எனது போராட்டம் தொடங்கிவிட்டது. சிலர் கட்சிக்கு துரோம் இழைத்துவிட்டு பதவிக்காக வெளியேறுவது சகஜம்தான். ஆனால், நாங்கள் மக்களை நேரில் சந்தித்து கட்சியை மீண்டும் கட்டமைப்போம் என்றார். திங்கள்கிழமை காலை அவர் புனேயிலிருந்து கராட் சென்றபோது பல இடங்களில் சாலையின் இரு பக்கங்களிலும் கட்சித் தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

சரத் பவார், கராட் சென்றபோது அவரை உள்ளூர் எம்.எல்.ஏ.க்களான பாலாசாகேப் பாட்டீல் மற்றும் மகரந்த் பாட்டீல் ஆகிய இருவர் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த இரு எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவார், தமது வீட்டில் மற்றவர்களுடன் ஆலோசனை கலந்தபோது உடன் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார், அதிரடியாக ஞாயிற்றுக்கிழமை ஏக்நாத் ஷிண்டே-பாஜக தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக பதவியேற்றார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அஜித் பவாருடன் வேறு 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com