இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை யார் வைத்திருந்தாலும் அவர்களை ஆதரிப்போம் - ஓ.பி.எஸ் தரப்பு முடிவு

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை யார் வைத்திருந்தாலும் அவர்களை ஆதரிப்போம் - ஓ.பி.எஸ் தரப்பு முடிவு

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது, எடப்பாடியை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் தொடர்ந்து உறுதி காட்டிவரும் ஓ.பி.எஸ்.தரப்பு, இரட்டை இலை சின்னத்தில்  யார் போட்டியிடுகிறார்களோ, அவர்களை ஆதரிக்கப்போவதாக ஓ.பி.எஸ். தரப்பு அறிவித்திருக்கிறது.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்திருந்தார்கள். அவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதில் சர்ச்சை இருந்தது. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடம் பதில் பெற்று விசாரணை நடத்திய பின்னர் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.கவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அ.தி.மு.கவில் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வில் 2665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  இதில் 2,432 பேர் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 2441 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியானதும், எடப்பாடி தரப்பு களத்தில் இறங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளரான தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களை நேற்றிரவு தொடர்பு கொண்டார்கள். விடிவதற்குள் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் நோட்டரி பப்ளிக் சான்று, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன் என்று எழுதப்பட்டு கையெழுத்து பெறும்படியான விண்ணப்பம் இன்று காலைக்குள் தயாராகிவிட்டது.

சென்னையில் உள்ள 8 அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுக்கும் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் தங்களுடைய பகுதிக்கு உட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் படிவத்தை சமர்ப்பித்துவிடடார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களின் விண்ணப்பபடிவம் பெறப்பட்டு சரி பார்க்கப்படும்.

திங்கள் கிழமை காலை டெல்லிக்கு செல்லும் அ.தி.மு.கவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் காலை 11 மணிக்கு ஒப்படைக்க இருக்கிறார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கும்.  திங்கள் கிழமை மாலைக்குள் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டு பிரச்சாரம் ஆரம்பமாகும். செவ்வாய்க்கிழமை காலை தென்னரசு மனுதாக்கல் செய்யவிருக்கிறார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com