மேற்கு வங்கத்தில் ஐபோன் வாங்குவதற்காக பெற்றோர்களே தங்களது 8 மாத பிஞ்சு குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் பர்கானா மாவட்டத்தில் வசித்து வரும் ஜெய் தேவ் - சதி என்ற தம்பதியினர் தங்களது 8 மாத குழந்தையை அதே பகுதியில் வசித்து வரும் பிரியங்கா கோஷ் என்பவரிடம் விற்பனை செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளார்.அந்த குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த போதும், அது கை கொடுக்காததால் 2வது குழந்தை பெற்று விற்பனை செய்துள்ளனர்.
பெற்ற குழந்தையை விற்பதற்கான காரணம் தான் என்ன என விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இருவருக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் மீது அதிகம் மோகம் வந்ததால் குழந்தையை விற்று ஐபோன் வாங்கி அதில் அழகு அழகாக ரீல்ஸ் செய்யலாம் என எண்ணியுள்ளனர். போட்ட ப்ளான் படி குழந்தையையும் பிரியங்காவிற்கு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார், 8 மாத குழந்தையை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் தந்தை தப்பியோடிய நிலையில், பணம் கொடுத்த நபரையும், குழந்தையின் தாயாரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அக்கம்பக்கத்தாரிடம் நடத்திய விசாரணையில் இருவரும் ஊர் ஊராக சுற்றி ரீல்ஸ் போடுவதையே வேலையாக வைத்துள்ளதாகவும், குழந்தையை விற்ற பணத்தில் நினைத்த படி ஐபோன் வாங்கி பல்வேறு இடங்களுக்கு ஹனிமூன் போயுள்ளதாகவும் தெரிவித்தனர்.