

மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு அனல் பறக்கும் அரசியல் தலைவர். 2021 ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் தனி ஒருவராக நின்று சட்டப்பேரவைத் தேர்தலில் போராடி 292 தொகுதிகளில் 213 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் தடுத்த பெருமை இவரையே சேரும். சொந்த மாநிலத்தில் செல்வாக்கு, சிறந்த தலைமை, பா.ஜ.க.வை எதிர்த்து குரல் எழுப்பும் வலிமை கொண்ட மம்தா பானர்ஜி, 2024 பொதுத் தேர்தலில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கலாம்.
1955 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி பிறந்த மம்தா பானர்ஜி, பல ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார். 1998 இல் திரிணமூல் காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை நிறுவி மேற்குவங்க அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறார். மேற்குவங்கத்தில் நீண்டகாலம் ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் இவரையே சேரும்.
மம்தா பானர்ஜியின் பலம் என்னவென்றால் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது. அவரது பேச்சுத் திறனும், செயல்திறனும் பல்வேறு சமூகத்தினரின் நன்மதிப்பை பெற்றுத்தந்தது. அதனால் அவரது கட்சி பலம் பெற்றது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். சமூகநீதியை வலியுறுத்தி வருபவர். நமக்காக போராடுபவர் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தியவர்.
மம்தா பானர்ஜியின் அரசியல் உத்தி என்னவென்றால் தாய்-தாய்நாடு-மக்கள் என்ற கோஷம்தான். மாநிலத்தின் பெருமை, கலாசார அடையாளம், மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருபவர். இதனால் இவருக்கு இருக்கும் வாக்கு வங்கி சரியாமல் உள்ளது. தேசிய அரசியலில் அவ்வப்போது தலைகாட்டி வந்தாலும், மாநிலத்தில் தனக்கென ஒருதனியிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அவருக்கு சவால்களும் காத்திருக்கின்றன. வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. 2021 ஆம் ஆண்டு மேற்குவங்க தேர்தலில் இவரது திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றாலும், அவரது செல்வாக்கு பிற மாநிலங்களிலும் எடுபடுமா என்பது பொதுத் தேர்தல் வந்தால் தெரிந்துவிடும். தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு சரியான மாற்று நாங்கள்தான் என்று கூறிவரும் பானர்ஜி. ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை எப்படி ஒன்றிணைக்க போகிறார் என்பது மிகப்பெரிய சவால்தான்.
பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் தனது அரசியல் எல்லையை விரிவுபடுத்துவதிலும், தேசிய அரசியலில் செல்வாக்கு பெறுவதிலும் மம்தா முக்கிய பங்காற்றக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். பா.ஜ.க.வுக்கு எதிராக ஓங்கி குரல் கொடுப்பவர் என்பதால் அவர் தேசிய அரசியலில் பேசப்படுகிறார். பா.ஜ.க. மாற்று நான்தான் என்று சொல்லிக் கொள்ளும் மம்தா பானர்ஜி, தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலும், கட்சியை வெற்றிபெற வைப்பதிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.