மேற்கு நைல் வைரஸ்... அச்சம் வேண்டாம்! தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

West Nile Virus
West Nile Virus

- தா.சரவணா

கேரள மாநிலத்தில் இப்போது வெஸ்ட் நைல் எனப்படும் புது வகை வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக திருச்சூர், கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் பரவல் அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கேரள அரசு, இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், காய்ச்சல் தொடர்பான அறிகுறி தென்பட்டால், அருகே உள்ள ஆஸ்பத்திரிகளை அணுகும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் தொடர்பாக, பொதுமக்கள் தற்காத்துக் கொள்வதற்காக தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும். பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும். பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரிடையாக பரவுவதில்லை இந்த வைரஸ் உகாண்டா நாட்டில் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

நோய் அறிகுறிகள்:

வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவீத மனிதர்களுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம். கோமா, உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும்.

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கும். எனினும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதாக ஏற்படும். இந்நோய் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மும்பையில் புழுதிப் புயல்… ராட்ச பேனர் விழுந்து 14 பேர் பலி!
West Nile Virus

சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது. வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருப்பின் குறிப்பாக மூளை காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடையவர்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

இந்நோய் எலைசா மற்றும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். நோய் தொற்று சந்தேகப்படும் நபர்களிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம் பூனேயில் பரிசோதனை செய்ய வசதி உள்ளது.

இந்த காய்ச்சல் பரவினால் பொது மக்கள் பீதியடைய வேண்டியதில்லை.. காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்நோயின் அறிகுறிகளுடன் வரும் மக்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். மேலும் நீர் தேங்காமல்இருத்தல் வேண்டும். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பு ஊசிகள்இல்லை. எனவே உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும். கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் கூடுதல் தகவலுக்கு எண் 104 ஐ தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com