திமிங்கலங்கள் கருணை கொலை.. ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி!

கரை ஒதுங்கிய திமிங்கலன்கள்
கரை ஒதுங்கிய திமிங்கலன்கள்
Updated on

ஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சி தோல்வி அடைந்ததால் அவை கருணைக் கொலை செய்யப்பட்டது பேசு பொருளாகியுள்ளது...

உயிர் போகும் நேரத்தில் உதவி கேட்டு கூச்சலிடும் பைலட் திமிங்கலங்களின் அபயக் குரல் தான் இது. டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை இந்த பைலட் திமிங்கலங்கள். கூட்டமாக செல்லும் போது ஒன்றை பின் தொடர்ந்து மற்றவை செல்லும் பழக்கம் உடையவை என்பதால் பைலட் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

பெண் பைலட் திமிங்கலங்கள் 6.5 மீட்டர் வரையிலும், ஆண் பைலட் திமிங்கலங்கள் 7.5 மீட்டர் வரையிலும் வளரும் தன்மை கொண்டவை. மேலும் ஆண் பைலட் திமிங்கலங்கள் 45 ஆண்டுகள் வரையிலும், பெண் பைலட் திமிங்கலங்கள் 60 ஆண்டுகள் வரையிலும் தோராயமாக உயிர் வாழ்கின்றன. அதாவது, ஆண் பைலட் திமிங்கலங்களை விட பெண் பைலட் திமிங்களங்கள் அதிக நாள் உயிர் வாழ்கின்றன. 

இந்நிலையில், ஒற்றுமைக்கு இலக்கணமாய் திகழும் இந்த பைலட் திமிங்கலங்கள் கூட்டமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் ஏராளமான திமிங்கலங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கரை ஒதுங்கி பின் கடலுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அல்பானி பகுதியில் உள்ள செயின்ட்ஸ் கடற்கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கடந்த வாரம் திடீரென கரை ஒதுங்கின. அவை மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்த நிலையில், வனவிலங்கு ஆர்வலர்கள், கடல்வாழ் விலங்கு நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் அவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இருப்பினும் 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்தன. அதன் பின், சிறப்பு உபகரணங்கள் உதவியுடன் அவற்றை கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டினர். ஒன்றிரண்டு திமிங்கலங்கள் கடலுக்குள் சென்ற நிலையில் மீதமிருந்த 42 திமிங்கலங்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டன. அப்போது அவை எழுப்பிய ஒலி நம்மை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்தது. 

அவற்றை காப்பாற்ற மருத்துவர்களும், 90-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இயன்ற அளவிற்கு முயற்சித்தனர். கடலுக்குள் அனுப்ப முயற்சித்தாலும் ஏனோ தெரியவில்லை. உயிர்போகும் எனத் தெரிந்தும் கரைக்கே திரும்பின. இதனால் செய்வதறியாது திகைத்த கால்நடை மருத்துவர்கள் அவை நீண்ட நேரம் துடிதுடித்து சாவதைக் கண்டு கனத்த இதயத்தோடு அவற்றை கருணைக்கொலை செய்ய முடிவு செய்தனர். அவை கருணைக்கொலை செய்யப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன. 

மேலும் அவற்றின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அந்த சோதனையின் முடிவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் தெரியவரும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கரை ஒதுங்கியதற்கான காரணம் குறிந்து ஆராய்ந்து வரும் வேளையில், நோய்தொற்று காரணமாக அவை கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் பைலட் திமிங்கலங்கள் கூட்டமாக கருணைக்கொலை செய்யப்பட்டது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com