நாடாளுமன்றத்தில் சோனியாவிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?

நாடாளுமன்றத்தில் சோனியாவிடம் பிரதமர் மோடி பேசியது என்ன?
Published on

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் அடுத்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறையை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தன. இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடைபெற்றுவரும் அசாதாரண சம்பவங்களால் அந்த மாநிலமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

இதற்கிடையில், இரண்டு பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துவந்து பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ ஒன்று வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இன்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ‘இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் தனியாக விளக்கம் அளிப்பார். இன்னொரு நாளில் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதம் நடத்தலாம்’ என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். ஆனால், எதிர்க்கட்சிகள் அதனைக் ஏற்றுக்கொள்ளாமல் அமளியில் ஈடுபட்டதால் இந்த மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று முற்றிலும் முடங்கிப்போனது.

முன்னதாக, இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் மோடி. அப்போது வரும் வழியில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டே வந்தார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென சோனியா காந்தியின் அருகில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு வணக்கம் தெரிவித்ததோடு, சிறிது நேரம் அவரிடம் பேசினார். அவையில் யாரும் எதிர்பார்க்காத இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி, அவையில் இருந்தோர் அனைவரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சோனியா காந்தியிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதற்கு சோனியா காந்தி தான் நலமாக இருப்பதாக பதில் கூறினார். சில நாட்களுக்கு முன்பு பெங்ளூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சோனியா காந்தி பயணித்த தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விமானம் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால், அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் மாஸ்க்கை சோனியா காந்தி அணிந்திருந்தார். இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருந்தன. அதுமட்டுமின்றி, சமீப காலமாக சோனியா காந்தி அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி, சோனியா காந்தியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். அதன் பிறகு, பிரதமர் மோடி அங்கிருந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, சோனியா காந்தி இருக்கை தேடிச்சென்று பேசிய சம்பவம் அவையில் இருந்தோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமின்றி, அவர்கள் இரண்டு பேரும் பேசியது குறித்த சுவாரசியத் தகவல்களும் பரபரப்பாக வெளியாகி இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com