
நினைத்துப் பாருங்கள். எத்தனையோ சமயங்களில் புறக்கணிக்கப்பட்டு இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமை புறக்கணிக்கப்பட்டிருக்கும். காலாகாலத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் போயிருக்கும். நண்பர்கள் மத்தியில் தேவையில்லாத புறக்கணிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். குடும்ப அங்கத்தினர்கள்கூடச் சில சமயம் உங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கத் தவறி இருப்பார்கள்.
ஒருவிதமான அடிபட்ட உணர்வு ஏற்பட்டிருக்கும்தானே? அவற்றைச் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் தினம்தான் இன்று.
புறக்கணிப்பையே நினைத்துக்கொண்டிருந்தால் அது தனிமை உணர்வையும், தன்னிரக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்திவிடும்.
ஒன்றை நினைவுபடுத்தினால் உங்கள் புறக்கணிப்புச் சிந்தனைகள் ஓடியே போய்விடும். அது என்ன தெரியுமா? “நான் மட்டும் இல்லை! எல்லோரும்தான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்று சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பெரிய பெரிய அறிஞர்களின் கருத்துக்கள் பலவும் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. சூரியனைச் சுற்றித்தான் பூமி சுழல்கிறது என்று போலந்து நாட்டைச் சேர்ந்த கோப்பர்னிகஸ் சொன்னபோது பலரும் எள்ளிநகையாடியிருக்கிறார்கள். பல வித நவீனக் கண்டுபிடிப்புக்களையும் ஆரம்பத்தில் இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போதையை திரையுலகில் கோலோச்சும் பல இயக்குநர்கள், நடிக நடிகையர், இசையமைப்பாளர்கள், போன்றோரும் எண்ணற்ற அவமானங்களைக் கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.
பல அரசியல் தலைவர்களின் ஆரம்ப வாழ்க்கையும் புறக்கணிப்புகளால் புடம்போடப்பட்டதேயாகும்.
இன்றைய தினத்தில் புறக்கணிக்கப்பட்ட உங்கள் நண்பர் ஒருவருடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மனசு லேசாவதை உணர்வீர்கள். உங்களில் ஒரு சிலர் காதலில் புறக்கணிக்கப்பட்டு இருக்கலாம். வசூல் ராஜா படத்தில் கமலஹாசன் சொல்வதுபோல “டாக்டர் பொண்ணு ’நோ’ சொன்னா நர்சுப் பொண்ணைக் காதலி” என்று புறக்கணிப்பை ஜீரணம்செய்து கொள்ளுங்கள். அதற்கான தினம்தான் இன்று.