“வாக்குறுதி என்ன ஆனது?” - தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. கேள்வி?

“வாக்குறுதி என்ன ஆனது?” - தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. கேள்வி?

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று (13-ம் தேதி) நடைபெற்றது. அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி  கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த வருடம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க. அரசு,  அதன் தேர்தல் அறிக்கையில் “தமிழகத்தில் தமிழர்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்படும்’ என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்தவில்லை" என்று அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

பிற மாநிலங்களில் எல்லாம், அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள். இவ்வாறான நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அசாம், உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது. “தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை” என்கிற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உள்ளது. இதற்காக போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 

 ''மாண்டஸ் புயலால் சென்னையில் 650 டன் மரக்கழிவுகள் அகற்றி உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். ஒரு மரமே 20 முதல் 40 டன் இருக்கும். அப்படி என்றால் எத்தனை மரங்கள் விழுந்திருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள்.

மாண்டஸ் புயல் பெரிய அளவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், தி.மு.க. அமைச்சர்கள் ஊடகங்களில் பெரியதாக காட்டிக் கொள்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புயல் பாதிப்பில் 3 ஆயிரம் டன் மரக்கழிவுகளை 3 நாட்களில் அகற்றினோம்.

 தி.மு.க.வின் தவறுகளை அ.தி.மு.க. சுட்டிக்காட்டுகிறது. அதனை, அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். மாறாக முதல்வர் ஸ்டாலின் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, “பிதற்றுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறி இருக்கிறார்.

 ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.  அ.தி.மு.க. அரசு  நடவடிக்கை எடுத்தது, அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. எங்களது கொள்கையை தற்போதைய தி.மு.க. அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தடைக்கு நாங்கள் ஆதரிப்போம்” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் காலங்காலமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. 2006 - 2011 தி.மு.க. அரசில் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அப்போது துணை முதல்வராக பதவி வகித்தவர்தான். எனவே, உதயநிதி அமைச்சராவது என்பது பெரிய விஷயமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com