விமானப் பயணத்தை ரத்து செய்தால் இப்படியா?

விமானப் பயணத்தை ரத்து செய்தால் இப்படியா?
Published on

விமானப் பயணத்திற்காக முன்பதிவு செய்த பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்யும்போதும், விமான நிறுவனமே குறிப்பிட்ட பயணத்தை ரத்து செய்யும்போதும் பயணிகளிடம் ரத்து செய்ததற்கான கட்டணத்தை வசூலிப்பதில் விமான நிறுவனங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார்.

பயணத்தை ரத்து செய்வதற்கான கட்டணங்களை அரசு வரமுறைப்படுத்துவதில்லை. ஆனால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது.

விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே பயணத்தை ரத்துசெய்தால் எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதை விமான நிறுவனத்தினர் மற்றும் முன்பதிவு ஏஜெண்ட்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது வசூலிக்கப்படும் சட்டபூர்வமான வரிகள், பயனாளர் வசதிக் கட்டணம், விமான நிலைய வளர்ச்சிக் கட்டணம், பயணிகளுக்கான சேவை கட்டணம் போன்றவற்றை முன்பதிவை ரத்து செய்யும் பயணிகள் மற்றும் பயணத்தை மேற்கொள்ளாத பயணிகளுக்கு முழுமையாகத் திருப்பித் தர வேண்டும்.

விழாக்கால மற்றும் சிறப்புச் சலுகையின் அடிப்படையில் முன்பதிவு செய்யப்படும் முன்பதிவுகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். விமானப் பயணத்திற்கான அடிப்படைக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டியதில்லை.

எந்தச் சூழ்நிலையிலும், எந்த விதிமுறைப்படியும், அடிப்படைக் கட்டணம் மற்றும் எரிபொருள் செலவுக்கு அதிகமாக ரத்துக்காக பிடித்தம் செய்யப்படும் கட்டணத் தொகை இருக்கக்கூடாது.

டிக்கெட்டை முன்பதிவு செய்யும் ஏஜெண்ட்களின் கட்டணத்தைத் திருப்பியளிக்க வேண்டியதில்லை. அனைத்து விமான நிறுவனங்களும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்படுள்ளன.

கொரோனா காலத்தில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட மார்ச் 25, 2020 முதல் மே 24, 2020 வரையிலான காலத்தில் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

அந்த நேரத்தில் முன்பதிவு செய்திருந்த அத்தனை உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகள் அத்தனை பேருக்கும் முழுமையான கட்டணத்தை எவ்வித பிடித்தமும் இல்லாமல் திருப்பியளிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டிருக்கிறது.

இதுதவிர விமானப் பயணக் கட்டணம், விமானம் தாமதமாகப் புறப்படுவது, பயணிக்க அனுமதி மறுப்பது மற்றும் விமான நிறுவனங்கள் அளிக்கும் பிற சேவைகள் தொடர்பாக பயணிகளிடம் இருந்து அவ்வப்போது நேரடியாக வரும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதவிர, உள்நாட்டில் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பயணம் தொடர்பாக ஏதாவது புகாரளிக்க விரும்பினால், அதற்காகவே ‘ஏர் சேவா ஆப்’ என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பயணிகள் தங்களது புகாரைத் தெரிவித்தால், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் வி.கே. சிங் பதிலளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com