அதென்ன கிளி வேட்டைத் திருவிழா? எங்கே நடக்கிறது?

அதென்ன கிளி வேட்டைத் திருவிழா? எங்கே நடக்கிறது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வம் என்று அழைக்கப்படும் பொன்னர், சங்கர் அரசர்களின் மாசிப் பெருந்திருவிழா கோலகலமாக நடைபெற்றது. விழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பொன்னர், சங்கரை வணங்கி அருளாசி பெற்றுச் சென்றனர்.

கொங்கு மண்டலத்து பக்தர்களின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான இத்திருவிழா ஃபிப்ரவரி 20 முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இத்திருவிழாவின் ஹைலைட்டே அண்ணன்மார் தெய்வங்களான பொன்னரும், சங்கரும் தங்களது பெற்றோர் இறப்புக்குப் பின் தங்கை அரிக்காணி எனும் நல்ல தங்காளுடன் வசித்து வருகின்றனர். அப்போது தங்கை பெற்றோரின் இழப்பை நினைத்து மிகுந்த சோகத்துடன் இருக்கும் போது அவளுக்கு கிளி பிடித்துத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்க முயற்சிக்கின்றனர். அந்தக் கிளி ஏழு வனம் கடந்து ஒரு ஆலமரத்தின் உச்சியில் அமர்ந்து ஆட்டம் காட்டுகிறது. சகோதரர்கள் இருவரும் கிளி கிடைக்காத கோபத்தில் ஏழு வனங்களையும் அழித்து துவம்சம் செய்து விட்டு கடைசியில் ஆலமரத்தின் உச்சியில் இருக்கும் கிளியைப் பிடித்துக் கொண்டு வந்து தங்கை அரிக்காணி எனும் நல்ல தங்காளிடம் ஒப்படைத்து அவளைச் சந்தோசப் படுத்துகின்றனர். இந்தக் கிளி பிடிக்கும் படலம் தான் இன்று நிறைவுற்றது. இதில் லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பொன்னர், சங்கர் ஐதீகக் கதைகளின் படி போரில் இறந்த தனது சகோதரர்களைத் தேடி நல்ல தங்காள் போர்க்களத்திற்கு வருகிறாள். அங்கு சகோதரர்கள் படுகளத்தில் உயிரற்று கிடக்கும் நிலையைத்தான் அவளால் காண முடிகிறது. இதனால் சோகம் தாளாது பெருங்குரலெடுத்து நல்ல தங்காள் அழுகிறாள். அவலது அழுகுரலானது அருகில் தவசி மலையில் பெரும் தவம் செய்து கொண்டிருந்த அன்னை பெரிய காண்டியம்மனின் காதில் விழுகிறது.

அரிக்காணி எனும் நல்ல தங்காளின் அழுகையைக் கண்டு உருகிப் போன பெரிய காண்டியம்மன், மகாமுனியிடம் புனித தீர்த்தக் குடத்தை தந்து அவளது சகோதரர்களை அதாவது மாண்டு போன பொன்னர் சங்கரை உயிருடன் மீட்டுத் தர அபயமளிக்கிறார்.

இதில் வரலாற்று உண்மையும் உண்டு. பொன்னர் சங்கர் இருவரும் போரில் படுகாயமுற்று மாண்டு போனதும், அவர்களைக் காண படுகளத்திற்கு வந்த தங்கை பெருங்குரலிட்டு அழுததும் உண்மைச் சம்பவங்களே! மாண்டவர் மீண்டு வந்தது அப்பகுதி மக்களின் ஐதீகங்களில் ஒன்று. அது அவர்களது நம்பிக்கை. இன்றும் கூட கொங்குப் பகுதியில் பொன்னர் சங்கர் அண்ணன்மார் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

இத்திருவிழா அண்ணன்மார் படுகளம் சாய்தல், புனித தீர்த்தம் தெளித்து பின் எழுப்புதல், கிளி வேட்டை என மூன்று நிலைகளில் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. அண்ணன்மார் போரிட்டு படுகளம் வீழந்த வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் வளாகத்திலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவள நாட்டிலும் திருவிழா அனுசரிக்கப்படுகிறது. நல்ல தங்காளுக்காக அண்ணன்கள் கிளி வேட்டை நடத்தும் பாகம் பல லட்சக்கணக்கான பக்தர்களால் இன்றும் பக்திப் பரவசத்துடன் அனுசரிக்கப்பட்டு வெகுதிரளான மக்களின் பக்திப் பெருக்குடன் நிறைவடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com