
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய அரசை நிறுவியுள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இதர சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசேனை உத்தவ் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுநீல் பிரபு, சிவசேனையில் பிளவு ஏற்படாத நிலையில் தலைமைக் கொறடா என்ற முறையில் தாக்கல் செய்த ஷிண்டே மற்றும் இதர எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் மேற்கண்ட உத்தரவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இரண்டு வாரங்களில் பதிலளிக்கும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மே 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீரப்பை மீறி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவர் தொடர்ந்து அலட்சியம் காட்டி தாமதம் செய்துவந்தால் மனுதாரர் அரசியலமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவை கையில் எடுக்க வேண்டியிருக்கும் என்று வழக்குரைஞர் நிஷாந்த் பாட்டீல் மற்றும் அமித் ஆனந்த் திவாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரர் கூறியிருந்தார்.
நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் மீது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மே 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்த போதிலும் பேரவைத் தலைவர் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகா விகாஸ் அகாதி என்னும் கூட்டணியை உருவாக்கி அரசு அமைத்து முதல்வரானார்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஷிண்டே, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உத்தவ்க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வெளியேறி, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.