இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, பிரபல எழுத்தாளர், கல்வியாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நான்கு பேரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அந்தப் பதவிகளுக்கான தேடுதல் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் குழு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், இன்று அக்குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி சமர்ப்பித்தார்.
இதன்படி தேர்வுக் குழு அளித்த தகுதியானவர்கள் பட்டியலின் அடிப்படையில் தகவல் ஆணையர்களை முதலமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட குழு விரைவில் கூடி தேர்வு செய்ய உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வெ.இறையன்பு, தலைமை தகவல் ஆணையர் பொறுப்புக்கு விண்ணப்பித்து உள்ளார்.
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பொறுப்புக்கு ஒருவேளை வெ.இறையன்பு தேர்வு செய்யப்பட்டால் அவர் தமிழகத் தலைமை செயலாளர் பதவியில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜூன் 16ம் தேதியோடு வெ.இறையன்பு பணி நிறைவு பெறுகிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே இறையன்பு ஓய்வில் செல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.