மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் குழு விரைவில் மணிப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடரும் வன்முறையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 147 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் வீடுகள் இன்றி பொதுவெளிகளில் வசிக்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் மணிப்பூரை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலைகளில் எழுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியது அடுத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பேசிய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிப்பூரில் வாழக்கூடிய 4000 தமிழர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான மோரோ அதிக சேதத்திற்கு உள்ளாகி உள்ளதால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கும், மேலும் தமிழர்கள் கணிசமாக வசிக்கக்கூடிய இம்பால் மேற்கு, காக்சிங், தௌபால், காங்போக்பி போன்ற மாவட்டங்களிலும் உள்ள தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கும் தமிழ்நாடு அமைச்சர் ஒருவரின் தலைமையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு விரைவில் மணிப்பூர் செல்ல இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் அங்குள்ள தமிழர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வேண்டிய ஏற்பாடுகள் செய்வதற்காக மணிப்பூர் மாநில அரசுடனும் ஒன்றிய அரசிடனும் ஆலோசிக்கப்பட உள்ளதாம். இதற்காக இன்னும் ஒரு சில நாட்களில் மணிப்பூரில் தமிழர்கள் நிலை குறித்த ஆய்வு செய்ய குழு பயணத்தை மேற்கொள்ள உள்ளது.