

தமிழகத்தில் ஆட்சியமைக்க கோரி தவெக தலைவர் விஜய் ஆளுநரை 2 முறை சந்தித்த நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை தவெகவிடம் இல்லை என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லையென தவெக தலைவர் விஜய்யிடம் இன்று ஆளுநர் எடுத்துரைத்தார். இதனையடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தேவை என்பதையும் ஆளுநர் அப்போது விஜய்யிடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பு குறித்து தவெக தரப்பில் இன்னும் மவுனம் கலைக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.