

44 வயது அசோக் குமார் லோதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது நெருங்கிய நண்பரான கெளரவ் ராஜ்புத்துக்கு அசோக்குமார் மீது அலாதி ப்ரியம். இருவருமே நெடுங்காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் அசோக் குமாருக்கு திடீரென புற்றுநோய் என்று அறிந்ததுமே மனமுடைந்து போனார் கெளரவ்.
ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையோரம் அசோக் குமாருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது எரியும் சிதையில் திடீரென ஒரு நபர் ஓடி வந்து பாய்ந்தார். அது வேறு யாரும் இல்லை... கெளரவ் ராஜ்புத் தான். சிறு வயதிலிருந்து உயிர்த்தோழனாக இருந்த தனது நண்பனின் இழப்பைத் தாங்க முடியாமல் மனமுடைந்து போய் அப்படியொரு விபரீதமான முடிவுக்கு வந்திருக்கிறார் கெளரவ். சிதையில் குதித்ததில் கெளரவ்வுக்கு 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும் செல்லும் வழியிலேயே அவர் அதிக பட்ச தீக்காயம் காரணமாக உயிரிழந்தார் எனத் தகவல்.
இச்சம்பவம் குறித்து ஃபிரோஸாபாத் காவல்துறையினர் கூறுகையில்,
இறுதிச்சடங்கின்போது, அசோக் குமாரின் உடல் எரியூட்டப்பட்டதும் அவரது உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராதவகையில் கௌரவ் “நண்பா.. நானும் வருகிறேன்” என்று கத்திக்கொண்டே எரிந்துகொண்டிருந்த தகனமேடையில் குதித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பலியானார்.
- என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பலியான கௌரவின் சகோதரர் கூறுகையில், “அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒரே பள்ளியில் பயின்றார்கள். இசைக் கருவிகளை கற்றுக் கொண்டு அவற்றை இசைத்து பலரையும் மகிழ்ச்சியடைய வைப்பார்கள். ஒருவருடைய கஷ்டத்தை மற்றவர் பகிர்ந்து கொள்வார்கள். இவர்களுடைய பிள்ளைகளைக் கூட ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார்கள். புற்றுநோய் கண்டறியப்பட்டதும், கௌரவ்தான் அதற்கான செலவுகளை செய்துவந்தான்.
- என்று கூறினார்.
நடந்த சம்பவம் மிக அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் விபரீதமாக இருந்த போதும், இதுவரை அது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறந்த கணவரின் சிதையில் மனைவிகள் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்த இந்த நாட்டில் அந்த மூடப்பழக்கத்தை ஒழிக்க ஒரு வில்லியம் பெண்டிங் பிரபுவும், ராஜராம் மோகன் ராயும் தேவைப்பட்டார்கள். ஆனால், இன்றைய நவீன யுகத்தில் உயிர்த் தோழனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் பால்ய நண்பர் ஒருவர் மனமுடைந்து சிதையில் குதித்து உயிர்விட்ட செயலானது முற்றிலும் விநோதமானதாகவும், கலக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டது .