என்று தீரும் இந்தத் துயரம்?

என்று தீரும் இந்தத் துயரம்?
Published on

ட்டு வழிச்சாலை, நான்கு வழிச்சாலை, ஆகாய நடை மேடை என்றெல்லாம் வசதி வாய்ப்புகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்தான், ஒருவழிச் சாலையே இல்லாமல் ஒருசில கிராம மக்கள் தங்கள் வீட்டு பிணங்களை டோலி கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. ஆம், திருவண்ணாமலை மாவட்டம், எலந்தம்பட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் இறந்த ஒரு பெண்ணின் உடலை பல கி.மீ. தொலைவுக்கு அவர்களின் உறவினர் சுமந்து சென்ற காட்சி மனதை உலுக்குவதாக இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் எலந்தம்பட்டு மலை கிராமத்தில் வசிக்கும் முருகன் என்பவர் மனைவி சாந்தி. இவர் சில நாட்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கால் உடல் நிலை பாதிக்கப்பட்டார். அந்த மலை கிராமத்தில் இருந்து கீழே இறங்க சாலை வசதி இல்லாததால் உடனே அவர்களால் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் சுமார் ஒரு வார காலமாக வீட்டிலேயே அந்தப் பெண் கை வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமானதால் சிரமப்பட்டு இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை மலை கிராமத்தில் இருந்து படவேடு வரை அழைத்து வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு அவருக்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், காலம் கடந்து வந்ததால் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்து இருக்கிறார்.   

இறந்துபோன அந்தப் பெண்ணின் உடலை மருத்துவமனையிலிருந்து படவேடு ஜவ்வாதுமலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதற்கு மேல் செல்ல சாலை வசதி இல்லாததால் அங்கேயே அந்தப் பெண்ணின் உடல் இறக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் சென்று இருக்கிறது. பிறகு மலை மீது இருக்கும் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு, உடலைக் கொண்டு செல்ல என்ன செய்வது என்று யோசித்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், டோலி கட்டி அந்தப் பெண்ணின் உடலை மிகவும் சிரமப்பட்டு அந்த மலை கிராமத்துக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர்.

இதுபற்றி எலந்தம்பட்டு மலை கிராம மக்கள் கூறும்போது, “எங்கள் மலை கிராமத்தில் இருந்து அடிவாரத்துக்கு வர சாலை வசதி இல்லை. அதை அமைத்துத் தரும்படி நாங்களும் கேட்டுக்கொண்டுதான் வருகிறோம். ஆனாலும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலை வசதி இல்லாததால் உடனே சிகிச்சை பெற முடியாமல் இந்த கிராமத்தில் பலர் இறந்து வருகின்றனர். இப்போது இறந்துபோன சாந்தியின் உடல் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு டோலி கட்டி கொண்டு செல்லப்பட்டது. மேலும், இதுபோன்ற துயரம் நிகழாமல் இருக்க தமிழக அரசு உடனே எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும்” என்ற கூறி உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com