தல தோனி என்ற பெயரைச் சொன்னாலே, இப்படி ஒருவர் இனி இந்திய கிரிக்கெட்டில் உருவாக வாய்ப்பில்லை என்கிற எண்ணம் நாம் அனைவருக்குமே ஏற்படும். தன்னுடைய சிறப்பான செயல்களால் மிகப்பெரிய ஆளுமையாக மாறி இருக்கும் தல தோனியின் பிறந்தநாள் இன்று.
தனது 42 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தோனியின் பழைய சாதனைகளைப் பற்றிய பேசினால், நம்முள் பலருக்கு அது சலிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் அவர் கடந்த காலத்தில் என்னவெல்லாம் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்றே. எனவே அவர் பல அணிகளை கதறவிட்ட கதைகளை ஓரமாக வைத்துவிட்டு, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பமான ChatGPT இவரைப் பற்றி என்ன கூறியது என்பதைப் பேசலாம்.
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி எல்லா தருணங்களிலும் அவரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவரும் சிரித்தபடியே 'இப்போதைக்கு இல்லை' என்ற பதிலையே சொல்கிறார். பலர் இந்த கேள்விகளை அவருடன் முன் வைப்பதால் சலிப்படைந்த தோனியின் ரசிகர் ஒருவர், "IPL போட்டிகளில் தோனி ஓய்வு பெற தான் வேண்டுமா?" என்ற கேள்வியை ChatGPTயிடம் முன்வைத்தார். அதற்கு ChatGPT என்ன கூறியதென்றால்,
"ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அனுபவம் வாய்ந்த மற்றும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே, சிஎஸ்கே-வுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இருப்பினும் சமீப ஆண்டுகளில் அவருடைய பார்ம் அவருடைய ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விதமாக உள்ளது. 2020 ஐபிஎல் போட்டிகளில் 14 போட்டிகளில் வெறும் 200 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு நடந்த 2021 சீசனில் 7 போட்டிகளில் 84 ரங்கன் மட்டுமே எடுத்தார்.
என்னதான் அவருடைய பார்மில் குறைகள் இருந்தாலும், அணிக்கு ஒரு நல்ல தலைவனாகவும், சிறப்பான விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். அவரின் அனுபவமும் புத்திசாலித்தனமும் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலமாகும். குறிப்பாக போட்டியின் அழுத்தமான தருணங்களில் மிகவும் அமைதியாக இருப்பது அவருடைய தனித்திறன். எனவே, தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது முழுக்க முழுக்க அவரது பார்ம், உடற்தகுதி, அணியின் தேவைகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தோனி முழுமையான உடல் தகுதியுடன் இருந்து, அணிக்கு பங்களிக்க முடியும் என நம்பினால், ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடலாம். அல்லது அவர் தனது நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தாலோ, இவரால் அணிக்கு நல்ல முறையில் செயல்பட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகம் எண்ணினாலோ, அவர் ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்கலாம். இருப்பினும் அவர் ஓய்வு குறித்த முடிவை தோனி தான் முடிவு செய்ய வேண்டும்" என ChatGPT பதில் அளித்தது.
இந்த பதிலை வைத்துப் பார்க்கும்போது, தோனியின் ஓய்வு முடிவு நீங்களோ, நானோ அல்லது சிஎஸ்கே நிர்வாகமோ நினைப்பதால் நடக்கப்போவதில்லை. அது இன்றளவும் முழுவதும் அவருடைய கையில் தான் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தல.