

வானிலேயே மிகப் பெரிய அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது! சூரியக் குடும்பத்தின் 'அழகன்' என்று வர்ணிக்கப்படும் சனிக்கோள் (Saturn), திடீரெனத் தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு மொட்டையாகக் காட்சியளிக்கிறது.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 23-ம் தேதி இரவு, வானத்தை அண்ணாந்து பார்த்தவர்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
சனிக்கோளைச் சுற்றியிருந்த அந்தப் பிரம்மாண்டமான, ஜொலிக்கும் வளையங்கள் எங்கே? யாராவது திருடிச் சென்றுவிட்டார்களா? அல்லது விண்வெளியில் சிதறி அழிந்துவிட்டதா?
உண்மையில் என்ன நடந்தது?
பதற வேண்டாம்! சனியின் வளையங்களுக்கு எந்த ஆபத்தும் நேராது. இது வானியல் இயற்கையாக நடத்தும் ஒரு மாபெரும் 'கண்கட்டி வித்தை' மட்டுமே.
விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால், சனியின் வளையங்கள் மாயமாகிவிடவில்லை; அவை மறைந்து விளையாடுகின்றன. இதற்குப் பெயர்தான் ‘ரிங் பிளேன் கிராசிங்’ (Ring Plane Crossing).
கண்ணாமூச்சி ஆட்டம் ஏன்?
சனியின் வளையங்கள் பார்ப்பதற்கு 2,80,000 கிலோமீட்டர் அகலத்திற்குப் பிரம்மாண்டமாக விரிந்திருந்தாலும், அவற்றின் தடிமன் (Thickness) என்னவோ வெறும் சில பத்து மீட்டர்கள் மட்டுமே.
இது ஒரு காகிதத்தைப் போன்றது. காகிதத்தை நேராகப் பார்த்தால் அகலமாகத் தெரியும்.
ஆனால், அதையே நம் கண்ணுக்கு நேராகப் பக்கவாட்டில் (Edge-on) வைத்தால்? ஒரு மெல்லிய கோடு போலத் தெரியும் அல்லது கண்ணுக்கே தெரியாது அல்லவா?
அதுதான் இப்போது நடந்திருக்கிறது! பூமியும் சனியின் வளையங்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டன.
இதனால் அந்த வளையங்கள் ஒரு மெல்லிய நூலிழை போல மாறி, தொலைநோக்கிகளில் பார்க்கும்போது கண்ணுக்கே தெரியாமல் மறைந்துவிட்டன.
15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் :
இது ஏதோ இன்று நேற்று நடக்கும் அதிசயம் இல்லை. சனி கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி வர 29.4 ஆண்டுகள் ஆகும்.
பூமி மற்றும் சனியின் சாய்வு கோணங்கள் காரணமாக, ஒவ்வொரு 13 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சம்பவம் நிகழும்.
ஏற்கனவே மார்ச் மாதம் இது நடந்திருந்தாலும், சூரிய வெளிச்சத்தால் அப்போது தெரியவில்லை.
ஆனால், இம்முறை நவம்பர் 23 அன்று இரவு வானில் இந்த 'வளையம் இல்லாத சனி'யைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
மீண்டும் வருமா அந்த அழகு?
நிச்சயமாக! இது ஒரு தற்காலிக மறைவுதான். பெரிய அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால், சனியின் குறுக்கே ஒரு மெல்லிய நிழல் கோடு ஓடுவதையும், டைட்டன் போன்ற நிலவுகளையும் பார்க்க முடியும். வளையங்கள் அங்கேயேதான் பத்திரமாக இருக்கின்றன.
2030-ம் ஆண்டுக்குள், சனிக்கோள் மீண்டும் தனது கோணத்தை மாற்றிக்கொள்ளும். அப்போது அந்த 'மகுடம்' மீண்டும் முழுப் பொலிவுடன் ஜொலிக்கும். அதுவரை இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்!