‘தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே?’ அண்ணாமலை அதிரடி!

‘தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே?’ அண்ணாமலை அதிரடி!
Published on

‘அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விச் செலவை மத்திய அரசு ஏற்று, அதை மாநில அரசுகளின் வழியே வழங்கி வருகிறது. தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்குவதுடன், இந்தாண்டு கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கையையும் உறுதி செய்ய வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது…

‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசின், ‘சமக்ரஹ சிக் ஷா’ திட்டம் எனப்படும் ‘அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான கல்வி செலவை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, அதற்கான தொகையை மாநில அரசு வழியே சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021-22ல் 1,598 கோடி ரூபாய்; 2022-23 டிசம்பர் வரை 1,421 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கி உள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகப் பள்ளிகளுக்கு மழலையர் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இரண்டு ஆண்டுகளாக இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது? தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை ஏழை மாணவர்கள் கல்விக்கு ஒதுக்க விரும்பாத திமுக அரசு இந்தத் திட்டத்தை முடக்க நினைக்கிறது என்று சந்தேகிக்கும் வகையிலேயே இந்தச் செயல்பாடுகள் இருக்கின்றன.

அதனால், ஏழை மாணவர்கள் தரமான கல்வி பெறுவதைத் தடுக்க முயற்சிக்காமல், தமிழக அரசு பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்குவதுடன், இந்த ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையையும் உறுதி செய்ய வேண்டும்'’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com