குவைத்திலிருந்து சென்னை வந்த விமானிகளின் லக்கேஜ்கள் விமானத்தில் இல்லாததால் பயணிகள் ஷாக் ஆகியுள்ளனர்.
விமான கோளாறுகள், தொழில்நுட்ப கோளாறுகள் போன்றவை ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், விமான பணியாளர்களின் கவன குறைவை என்னவென்று சொல்வது. அது எப்படி அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துப்போவார்கள். ஆனால், இங்கு வேண்டுமென்றே செய்ததுதான் டிவிஸ்டே.
ஆம்! குவைத்திலிருந்து சென்னை வந்த விமானிகளின் லக்கேஜ்களை காணவில்லை. பொதுவாக விமானங்களில் பயணிகள் தங்கள் கைப்பைகளைத் தவிர்த்து பிற லக்கேஜுகளை தனியாக அளிப்பதும், அவற்றை விமான நிலையங்களில் கன்வேயர் பெல்ட் பகுதியில் சேகரித்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.
அந்த விமானத்தில் 248 பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை சேகரிக்க கன்வேயர் பெல்ட் சென்றபோது 12 பேருடைய லக்கேஜ் மட்டுமே அதில் வந்துள்ளது. இதனைப் பார்த்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் தெரிய வந்தது. இது கவன குறைவு அல்ல. வேண்டும் என்றே செய்த செயல் என்று. ஆம்! அந்த அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தனர். அதாவது மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எடையை குறைக்க உடமைகள் அனைத்தும் குவைத் விமான நிலையத்திலேயே விடப்பட்டுள்ளதாகவும், இரண்டொரு நாட்களில் வேறு விமானத்தின் மூலம் அவை கொண்டு வரப்பட்டு பயணிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கொடுக்கப்படும் எனவும் சொல்லி அதிகாரிகள் சமாதானம் செய்துள்ளனர்.
தங்களில் சிலருக்கு மாற்று உடைகள்கூட இல்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை குவைத் விமான நிலையத்திலேயே அவர்கள் கூறியிருந்திருக்கலாமே என்று பயணிகள் சிறிது நேரம் வாக்குவதத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்கு உடைமைகள் இல்லாமல் பயணிகள் வெறுங்கையுடன் புறப்பட்டு சென்றனர். இதனால் சில நேரம் பரபரப்பு நிலவியது.
எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி விமான நிறுவனம் செய்த இந்த காரியத்தை எதிர்த்து கண்டித்து வருகின்றனர். இது அவர்களின் பொறுப்பற்ற செயலை குறிப்பதாகவும், இவர்களை நம்பி எப்படி விமானத்தில் பயணம் செய்வது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.