‘எது கறுப்பு நாள்?’ டெல்லி நிர்வாக மசோதா விவகாரத்தில் திமுகவை விமர்சித்த அண்ணாமலை!

‘எது கறுப்பு நாள்?’ டெல்லி நிர்வாக மசோதா விவகாரத்தில் திமுகவை விமர்சித்த அண்ணாமலை!
Published on

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் விதமாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லி நிர்வாக மசோதா (Delhi Service Bill)வைக் கொண்டுவந்து, அதை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்தப் பதிவில், ‘தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப்போல் தரம் குறைக்கும், டெல்லி நிர்வாக மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நான்’ என்றும், ‘பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ‘நான் யாருக்கும் அடிமையில்லை’ என்றபடியே, பாஜகவின் பாதம் தாங்கி, கொத்தடிமையாக தரையில் ஊர்ந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’ என்றும் அதிமுகவை விமர்சனம் செய்து இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதிவுக்கு பதிலடி தரும் விதமாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக, டெல்லி நிர்வாக மசோதா எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை நேற்று நாடாளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். நாட்டில் எமர்ஜென்சியை அறிவித்து ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

யூனியன் பிரதேசமான டெல்லி, ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக்கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும். மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகுவைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது" என்று அவர் விமர்சித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com