
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சி.யில் தான் அமெரிக்க அதிபர் தங்கும் அதிகாரப்பூர்வ அரசு மாளிகை உள்ளது. இந்த வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கட்டிடப் பகுதிகள் இடிக்கும் பணி நேற்று அக்டோபர் 20, அன்று தொடங்கியது. இது பற்றிய செய்திகள் அமெரிக்கா முழுக்க பேசு பொருள் ஆகியுள்ளது.சமீபத்தில் டிரம்ப் இந்த இடிப்பு பணியை பற்றி ஊடகத்தில் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்க அதிபர்களின் மனைவியின் கட்டுப்பாட்டில் இயங்கும் கிழக்குப் பகுதியில் இடிக்கும் பணியை நிறைவு செய்த பின்னர், அங்கு ஒரு பெரிய நடன அரங்கு கட்டப்பட உள்ளது. கிழக்குப் பகுதியில் தான் முதல் பெண்மணியின் அலுவலகங்கள் உட்பட பல அலுவலகங்கள் உள்ளன. இது 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.1942 ஆம் ஆண்டு இரண்டாவது மாடி சேர்க்கப்பட்டதாக வெள்ளை மாளிகை பதிவில் உள்ளது.
ஆயினும் இந்த திட்டத்திற்கு கூட்டாட்சி நிறுவனத்தின் கட்டுமானத்திற்கான ஒப்புதல் கிடைக்க வில்லை. புதிய நடன அரங்கம் 250 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட உள்ளது. வழக்கமாக வாஷிங்டன் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் பெரிய புதுப்பித்தல்களை செய்யும் முன்னர் , தேசிய மூலதன திட்டமிடல் ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் , இந்த திட்டத்திற்கு எந்த ஒரு ஒப்புதலும் பெறப்பட வில்லை. ஆனாலும் வெள்ளை மாளிகை இந்த மிகப்பெரிய கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
150 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்கள் ஒரு பெரிய நடன அரங்கம் அமைக்க விரும்பியதாகவும் , ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சுமார் 200 பேர் அமரக்கூடிய வெள்ளை மாளிகையின் மிகப்பெரிய அறையான கிழக்கு அறை மிகவும் சிறியதாக இருப்பதால் , அங்கு நடன நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் உள்ளது என்று டிரம்ப் கருதுகிறார். 90,000 சதுர அடி பரப்பளவில், கண்ணாடியில் சுவர்கள் அமைக்கப்பட்டு , மிகவும் பிரமாண்டமான முறையில் கட்ட டிரம்ப் வலியுறுத்துகிறார். வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள புல்வெளியில் ராஜாக்கள், ராணிகள், ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களை சந்திக்கும் யோசனை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க குடிமக்களின் வரிப்பணத்தில் இருந்து இந்த்திட்டம் செயல்படுத்தபடாது. 1948 ஆம் ஆண்டு தெற்கு புல்வெளியை நோக்கிய ட்ரூமன் பால்கனி சேர்க்கப்பட்டதிலிருந்து, நிர்வாக மாளிகையில் செய்யப்படும் மிகப்பெரிய மாற்றம் இதுவாக இருக்கும். இந்த கட்டிடம் கட்ட அமெரிக்க தொழிலதிபர்கள் பலரும் சேர்ந்து 250 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளனர். ஆயினும் அவர்களின் பெயர்கள் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தற்போது கட்டுமான பணிகள் நடைபெறும் போது கிழக்குப் பகுதியில் உள்ள அலுவலகங்கள் அனைத்தும் உடனடியாக இடமாற்றம் செய்யப்படும் என்றும், புதிய கட்டிடம் முழுமையாக முடியும் வரையில் தற்காலிக இடத்தில் செயல்படும் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.