கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் சீனாவுக்குக் குட்டு!

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் சீனாவுக்குக் குட்டு!
Published on

சீன நாட்டின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிறகு அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது அந்த நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த மாறுபட்ட ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கோவிட் விவகாரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சில கருத்துகளை பகிர்ந்துள்ளது. அதில் புதிய கோவிட் நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்காவின் வெளிப்படைத்தன்மையை பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மையை பாராட்டியுள்ளது.

மேலும், கோவிட் தாக்கம் குறித்த கூடுதல் தகவல்களை சீனா பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அது மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை இயக்குனர் மைக்கேல் ரியான் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சீனா நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளதாக WHO இன்னும் நம்புகிறது' என்று தெரிவித்துள்ளார். அப்போது, 'பொது சுகாதார அமைப்பில் உள்ள மருத்துவர்கள் இந்த வழக்குகள் தொடர்பாக ஏன் புகாரளிக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொரோனாவுக்கு மாறாக, புதிய Omicron துணை மாறுபாடு XBB.1.5 வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதாகவும், தரவு மற்றும் அந்தத் தரவின் தாக்கம் தொடர்பாக WHO உடன் இணைந்து பணியாற்றுவதில், அமெரிக்காவின் சார்பாக தீவிர வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் பாராட்டினார். கொரோனாவின் புதிய Omicron துணை மாறுபாடு XBB.1.5 வைரஸ் பற்றி இதுவரை கிடைத்திருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் பார்க்கும்போது, இது மிகவும் பரவக்கூடிய ஒரு வடிவமாகவே பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com