ம.பி. முதல்வராக மோகன் யாதவ் தேர்வு.. ஹிந்துத்துவா ஆதரவாளரான இவரின் பின்புலம் என்ன?

MadhyaPradesh CM Mohan Yadav
MadhyaPradesh CM Mohan Yadav

த்தியப் பிரதேச மாநில முதல்வராக மோன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே யார் இந்த மோகன் யாதவ் என்ற கேள்வி பொதுமக்கள், ஊடகப்பிரிவினர், பா.ஜ.க. ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.

மத்தியப் பிரதேச முதல்வராக நீண்டகாலம் பதவி வகித்த சிவராஜ் சிங் செளஹானுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல், நரேந்திர சிங் தோமர், பா.ஜ.க. தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சர்மா ஆகியோரில் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால், மோகன் யாதவ் பெயர் அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி மற்றும் பிகாரில் தேஜஸ்வினி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களை சமாளிக்க சரியான நபர் மோகன் யாதவ்தான் என்று பா.ஜ.க. தலைமை கருதுவதாகத் தெரிகிறது.

மோகன் யாதவ் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஓபிசி வகுப்பினரின் ஆதரவில்தான் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஹிந்துத்துவா ஆதரவாளரான மோகன் யாதவ், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்தவர். தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர். 1965 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பிறந்த மோகன் யாதவ், உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ. ஆனவர்.

சிவராஜ் சிங் செளஹான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ். 2011 முதல் 2013 வரை மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவராக பணியாற்றினார். கல்லூரி படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற்றவர். இது தவிர எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். இளம் வயதிலேயே மாதவ் விக்யான் மகாவித்யாலயா மாணவர்கள் சங்கத்தின் இணை செயலாளராக இருந்தவர்.

1984 ஆம் ஆண்டு அகிலபாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் உஜ்ஜைன் நகரச் செயலாளராகவும் பின்னர் படிப்படியாக உயர்ந்து 1989-90 களில் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தேசிய செயலாளராகவும் பணியாற்றியவர்.

2004 ஆம் ஆண்டில் மோகன் யாதவ், பா.ஜ.க.வின் மாநில செயற்குழுவில் இடம்பெற்றார். 2021 இல் பட்டப்படிப்பில் ராமாயணத்தை ஒரு விருப்பப்பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.அரசியலுக்கு அப்பாற்பட்டு சுற்றுலாவை வளர்ப்பதிலும், உஜ்ஜைனியில் கலாசார மரபுகளை கட்டிக்காப்பதிலும் முக்கிய பங்காற்றியவர் மோகன் யாதவ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com