பிரதமர் மீது அவதூறு பேசியதாக கைதான பவன் கேரா யார்?

பிரதமர் மீது அவதூறு பேசியதாக கைதான பவன் கேரா யார்?

பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதாறாக பேசியதாக அசாம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

காங்கிரஸ் செய்திப்பிரிவின் தலைவராக இருக்கும் பவன்கேரா, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தில்லியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூருக்கு செல்ல இண்டிகோ விமானத்தில் ஏறினார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விமானத்திலிருந்து இறக்கி கைது தெய்தனர். பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதான புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பவான் கேரா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் விமான நிலையத்தில்போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. மனுவை விசாணைத்து எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அது சரி பவன் கேரா யார் தெரியுமா?

பவன் கேரா இந்திய அரசியல்வாதி, பேச்சாளர், சமூக ஆர்வலர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி பிறந்த பவன் கேரா, அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகையாளராக இருந்தவர்.

பின்னர் அவருக்கு தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அரசியல் கருத்துகளும், ஆட்சியும் கேராவுக்கு பிடித்திருந்தது.

இதையடுத்து பவன் கேரா ஷிலா தீட்சித்தின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார். அவருடன் பணியாற்றியபோது எப்படி அரசியல் செய்வது என்பதை பவன்கேரா கற்றுக்கொண்டார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் முதல்வர் பதவியை இழந்தபோது பவன் கேரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவரது அரசியல் பேச்சும், கருத்துக்களும் பலரையும் கவர்ந்த்தால் அவர் விரைவில் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து பவன் கேரா, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். பல்வேறு தொலைக்காட்சிகளிலும் அரசியல் ஆய்வாளராக பங்கேற்றார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சியையும் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார் அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் செய்தி மற்றும் ஊடகப்பிரிவின் தலைவராக பணியாற்றினார். 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக கேரா நியமிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டது ஏன்?

ஹிண்டன்பர் – அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்க முடியும் என்றால், முன்னாள் பிரதமர் வாஜபேயி, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்க முடியும் என்றால், பிரதமர் நரேந்திர கெளதம் தாஸ்… மன்னிக்கவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியின் பெயரை பவன் கேரா குறிப்பிடும்போது தடுமாற்றத்தில் நரேந்திர கெளதம் மோடி என்று கூறினார். ஆனால், பா.ஜ.கவினர் பிரதமரை அவர் அவமதித்து விட்டதாக புகார் கூறினர். இதன் அடிப்படையில் அவரை அசாம் போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடந்த செயலுக்கு கேரா வருத்தம் தெரிவித்துவிட்டதால் அவரை ஜாமீனில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே பவன் கேரா கைதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை கைது செய்தது ஏதேச்சாதிகாரமானது. பாஜகவின் ஊழல் ஆட்சியையும், திறமையற்ற நிர்வாகத்தையும் காங்கிரஸ் விமர்சித்து வருவதால் கட்சியின் குரலை ஒடுக்கும் நோக்கில் செயல்ப்ட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com