புக்கர் பரிசு 2023 க்கான ஷார்ட் லிஸ்ட்டில் இடம் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் யார்? தெரிந்து கொள்ளுங்கள்…!

புக்கர் பரிசு 2023 க்கான ஷார்ட் லிஸ்ட்டில் இடம் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் யார்? தெரிந்து கொள்ளுங்கள்…!

பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவலை நினைவிருக்கிறதா? ஹானர் கில்லிங் என்று சொல்லப்படக் கூடிய கெளரவக் கொலையை மையமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாவல். இதை அனிருத்தன் வாசுதேவன் 2017 ல் ‘Pyre’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் யூ கே(UK) பதிப்பு 2021 ல் வெளிவந்தது. இந்த நாவலை எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘இளவரசன்’ எனும் தலித் இளைஞருக்கு அர்ப்பணித்திருந்தார்.

இளவரசனை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரனுக்கும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவுக்கும் காதல் ஏற்பட்டு அக்டோபர் 8,2012 அன்று வீட்டை விட்டு வெளியேறி அக்டோபர் 10,2012 அன்று திருப்பதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அக்டோபர் 8,2012 அன்று காவல்துறை அதிகாரியை சந்தித்து தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் கேட்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவல் அதிகாரி அவர்கள் பாதுகாப்புக்கு காவலர்களை ஏற்பாடு செய்கிறார்.

இதற்கு நடுவே திவ்யாவை இளவரசன் கடத்திச் சென்றதாக திவ்யாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுக்கிறார்கள். தொடர்ந்து ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தான் தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே இளவரசனை திருமணம் செய்து கொண்டதாக திவ்யா தெரிவிக்கிறார். இதை அடுத்து திவ்யாவின் குடும்பத்தினருக்கு அஞ்சி இளவரசன், திவ்யா இருவரும் தமிழகத்தை விட்டு வெளியேறி வேறு மாநிலத்தில் 6 மாத காலம் இருந்து விட்டு மீண்டும் இளவரசனின் தந்தை இருக்கும் ஊரில் வந்து வாழத் தொடங்குகின்றனர்.

இதற்கிடையில் திவ்யாவின் தாய், அவருடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். இளவரசன் ஊரில் இல்லாத போது ஒருமுறை திவ்யாவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மகளை வீட்டுக்கு அழைக்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்ததோ?! திவ்யா மறுபடியும் இளவரசனுடன் சென்று வாழவில்லை.

தன் தாய் அனுமதித்தால் மட்டுமே இளவரசனுடன் இணைந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி காவல்நிலையத்திலேயே மயங்கி விழுகிறார். பின்னர் தன் குடும்பத்தார் மற்றும் உறவினர் நெருக்கடியால் மனம் குழம்பித் தவிக்கும் திவ்யா, 2013 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் நாள் தான், இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று தெரிவித்த மறுநாள் அதாவது ஜூலை 13 ஆம் நாள் இளவரசன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பின்புறம் இருக்கக் கூடிய ரயில்வே டிராக்கில் பிணமாகக் கிடக்கிறார். இது தான் இளவரசன் கெளரவக் கொலையின் பின்னணி.

இப்படி காதலுக்காக உயிரை இழந்த இளவரசனுக்குத்தான் பெருமாள் முருகன் தமது பூக்குழி நாவலை சமர்பித்திருந்தார்.

மேற்கண்ட விதமாக சமூக அவலங்களில் ஒன்றான கெளரவக் கொலையை மையமாக வைத்து எழுதப்பட்டது தான் பெருமாள் முருகனின் பூக்குழி.

இந்த நாவலில் சரோஜா எனும் இளம்பெண் குமரேசன் எனும் ஆதிக்க ஜாதி ஆணைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டு தனது புகுந்த வீட்டுக்கு வந்த பின் கணவன் ஊரில் இல்லாத தினமொன்றில் மாமியார் மற்றும் அவரது உறவினர்களின் கூட்டு சதித்திட்டத்தின் மூலமாக கெளரவக் கொலை செய்யப்படுகிறாள்.

நாவல் எழுதி விட்டால் மாத்திரம் இந்த அவலத்தை முற்றிலுமாகத் தடுத்தி நிறுத்தி விடமுடியுமா? எனும் கேள்விக்கு பெருமாள் முருகன் அளித்த பதில், ‘நிச்சயமாக இல்லை, ஆனால், ஒரு நாவலால் இதை பேசு பொருள் ஆக்க முடியும். சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் இதைப் பற்றி தெரிய வைக்க முடியும். அதன் மூலமாக மக்கள் பேசிப் பேசி இதற்கு ஒரு தீர்வு காண முயற்சி செய்வார்கள்’ என்று நான் நம்புகிறேன் என்கிறார் அவர்.

அத்துடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்புகிறார்.

"ஒரு நாவல் உடனடியாக ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நான் நம்பவில்லை, இருப்பினும், இது பொதுப் பார்வைகளை பரப்புவதற்கான ஒரு வழியாகும். "கௌரவக் கொலை" போன்ற தலைப்புகள் இலக்கியம், சினிமா மற்றும் செய்திகளில் விவாதிக்கப்படும்போது, அது மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மக்களின் மனதில் இது போன்ற சம்பவங்களும் பதிவாகும்" என்கிறார் பெருமாள் முருகன்.

இப்போது இந்த நாவலுக்கு என்ன வந்தது என்கிறீர்களா?

செவ்வாயன்று புக்கர் பரிசு அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச புக்கர் பரிசு 2023 இன் நீண்ட பட்டியலில் இடம்பிடித்த ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் இருந்து பரிந்துரைக்கப்பட்டு, ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட 13 புத்தகங்களில் ஒன்றாக இதுவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட நீண்ட பட்டியலிலிருந்து, ஏப்ரல் 18 ஆம் தேதி லண்டன் புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு ஆறு புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

சர்வதேச புக்கர் பரிசு 2023-ன் வெற்றியாளர் மே 23 அன்று லண்டனில் உள்ள ஸ்கை கார்டனில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார், பரிசுத் தொகையான

ஜிபிபி 50,000 மேலும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரிக்கப்படும்.

இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அனிருத்தன் வாசுதேவன் தமிழ்நாட்டில் பிறந்த எழுத்தாளர், இவர் ஒரு அறிஞர் மற்றும் கவிஞரும் கூட 10 நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நான்கு கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்

வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்ட ‘மாதொருபாகன்’ நாவலுக்காக அவர் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புப் பரிசைப் பெற்றார். தமிழகத்தில் கொங்கு பகுதியில் மிகப்பெரிய பதற்றத்தை நிலவச் செய்திருந்த மாதொரு பாகனும் பெருமாள் முருகனால் எழுதப்பட்ட நாவலே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com