
எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் யார் என்பது ஆட்சிக்கு வந்த பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.எல்.புனியா தெரிவித்தார்.
லக்னெளவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த புனியா, பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை வென்ற நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கான உத்திகளை வகுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேசினர். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 26 அரசியல்கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.க. உள்ளது. இதை நாங்கள் ஒன்றிணைந்து தடுப்போம் என்றார் அவர்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம், கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி, பிகார் தலைநகர் பாட்னாவில், மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஸ்மிருதி இரானி வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் தோற்பது உறுதி. அமேதி தொகுதி மக்கள் நிச்சயம் அவரை தோற்கடிப்பார்கள். அந்த இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அல்லது எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் வெல்வது உறுதி என்றும் புனியா தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை, பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். வரும் தேர்தலிலும் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியிலேயே போட்டியிட முடிவுசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ராகுல்காந்திக்கு செல்வாக்கு உள்ள இடமாக இருந்த அமேதி தொகுதியில் கடந்த முறை ஸ்மிருதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்திருந்தார். அமேதியைப் போலவே ரேபரேலியும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.