

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வரப்போகிறார் என்கிற யூகங்கள் கடந்த சில நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. கே.எஸ்- அழகிரி தலைவராக தொடர முடியாத நிலையில் அடுத்த தலைவரை தேடுவதில் டெல்லி தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆறு பேர் கொண்ட பட்டியலை பரிசீலனை செய்து வருகிறார்கள். பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்.பிக்கள்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் முன்னாள் நிதியமைச்சரின் மகனும், இந்நாள் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்தும், கூட்டணி குறித்தும் பேசியிருக்கிறார். காங்கிரஸ் தேசியக் கட்சியாக இருப்பதால் மாநிலங்களின் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்க இருப்பதாகவும், தமிழகத்தில் கூட்டணித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதால் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரும் ஒருமித்த குரலில் தி.மு.கவுடனான கூட்டணி தொடரவேண்டும் என்று விரும்புகிறார்கள். யாரும் தி.மு.கவை எதிர்த்து குரல் எழுப்பவில்லை. டெல்லி தலைமையும் தமிழகத்தில் கூட்டணி சுமூகமாக இருப்பதாகவே நினைக்கிறது. ஆனால், தி.மு.கவுடன் இணைந்து செயல்பட்டு, சென்ற முறை போல் பத்து காங்கிரஸ் எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கேற்ப தி.மு.க மேலிடத்திடம் பேசி நல்ல தொகுதிகளை பெறக்கூடிய தலைவர் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பு.
தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். பணியாற்ற விருப்பமுள்ளது. பதவியை வழங்குவது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று பேசியிருக்கிறார். ப. சிதம்பரம் குடும்பத்தின் மீது தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் தேசிய அளவிலும் நிறைய மரியாதையும் செல்வாக்கும் உள்ளது.
கார்த்தி சிதம்பரத்திற்கு சக போட்டியாளராக கரூர் எம்.பியான ஜோதி மணி தொடர்ந்து இருந்து வருகிறார். ஜோதி மணி, காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவிடம் ஜோதி மணிக்கு நல்ல அறிமுகம் உண்டு. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து பின்னரே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜோதி மணி நியமிக்கப்படுவார் என்று செய்தி வெளியானது. பின்னர் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை நடத்தியபோது, ஜோதி மணி கடைசிவரை உடனிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஜோதி மணி போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்தவரை நியமிக்கவேண்டும் என்பது ராகுல் காந்தியின் எண்ணம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் ஜோதி மணிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை வெளிப்படையாகவே எதிர்த்து அறிக்கை வெளியிட்ட சம்பவங்களும் உண்டு.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஜோதி மணி மற்றும் கார்த்தி சிதம்பரம் இடையே வலுவான போட்டி நிலவுகிறது. யாருக்கு வெற்றி? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.