

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 2,500 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 2022 முதல் 2024 வரை 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். இத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. அதேசமயம், எதிர்க்கட்சிகள் இந்தத் தொகையை 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்தப் பொங்கல் பரிசு மற்றும் பணத்தை நெரிசலின்றி விநியோகிப்பதற்காக தமிழக அரசு டோக்கன் முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். அந்தத் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பையும் 3,000 ரூபாய் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் ₹3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் (Rice Cards) மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும். இதன் காரணமாக, சர்க்கரை ரேஷன் அட்டை (Sugar Cards) வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைகளான PHH, PHH-DV, SBP, NPHH ஆகிய பிரிவினருக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்பதால், அரிசி அல்லாத மற்ற அட்டைதாரர்களுக்கு இந்தப் பலன் கிடைக்காது. குறிப்பாக, சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டைதாரர்கள் மற்றும் எந்தப் பொருட்களும் வாங்காமல் அடையாளத்திற்காக மட்டும் அட்டை (No Commodity Cards) வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்போ அல்லது ரொக்கப் பணமோ வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.