சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழகம் சந்திக்கும் முதல் இடைத் தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் என்பதால் அனைவராலும் இது ஊற்று நோக்கப்படுகிறது. இன்று காலை முதல் பரபரப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மற்றும் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் மற்றம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் இந்தத் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இன்று காலை ஈரோடு, சிஎஸ்ஐ பள்ளியில் அமைந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்த வருகை தந்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தனது வாக்கினைச் செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். இந்த இடைத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் பெற்றுக்கொள்ளாமல் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை அளிக்கும் மனநிலைக்கு மாற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
‘இந்த இடைத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை’ என்று வேறு எந்தக் கட்சியினர் கூறியிருந்தாலும் அதை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஆளும் பாஜக கட்சியின் ஒரு பொறுப்புள்ள எம்எல்ஏ சரஸ்வதி இந்தக் கருத்தைக் கூறி இருப்பது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகப் பலராலும் கருதப்படுகிறது.