சரத்  பவார்
சரத் பவார்

இந்திய இளைஞர்களுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை? சரத் பவார் சொல்லும் காரணத்தைக் கேளுங்க!!

Published on

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் சரத் பவார். இவர் புனேயில் கட்சித் தொண்டர்கள் சார்பில் நடைபெறும் ஜன ஜாகரண யாத்திரையை புதன்கிழமை (ஜன. 4) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீதும், மகாராஷ்டிர அரசு மீதும் அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அப்படி அவர் என்னதான் சொன்னார்?

பா.ஜ.க. அரசு நாட்டில் சமூகப் பிரச்னையை உருவாக்கி வருகிறது. பணவீக்கம், வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை அதிலிருந்து திருப்ப வகுப்புவாத பிரச்னைகளை கிளப்பி விடுகிறது. எதற்காக இதைச் செய்கிறார்கள்? தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே இதைச் செய்கிறார்கள்.

இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் பசி, பட்டினிக்கு தீர்வுகாண முடியும். விவசாயிகள் விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரித்தாலும் அவர்களுக்கு அரசு கட்டுபடியாகக் கூடிய விலையை கொடுக்க மறுத்து வருகிறது. இடைத் தரகர்களின் நலன்களை காப்பதிலேயே அரசு கவனம் செலுத்துவதால் சாதாரண மக்கள் பணிவீக்கத்தால் பாதிக்கப்பட்டு பொருள்கள் வாங்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் நன்கு படித்தவர்கள். வேலை வேண்டும் என்று கேட்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. வேலையில்லாததால் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. அவர்களுக்கு பெண் தரவும் மறுக்கின்றனர்.

மகாராஷ்டிர அரசு புதிதாக தொழில்களைத் தொடங்குவதிலும் ஆர்வமாக இல்லை. இருக்கும் தொழில்களையும் ஊக்கப்படுத்துவது இல்லை. இதனால் மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளது.

ஒருமுறை நான் கிராமத்தின் பக்கம் காரில் சென்று கொண்டிருந்தபோது 25 முதல் 30 இளைஞர்கள் ஓர் இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். அவர்களிடம் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டேன். சிலர் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருப்பதாகவும், சிலர் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறினர். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டபோது இல்லை என்று பதிலளித்தனர். என்ன காரணம் என்று கேட்டபோது வேலை இல்லாத எங்களுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்றனர். ஊரகப் பகுதிகளில் இது போன்ற புகார்களை கேட்க முடிந்தது.

இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால்தான் திருமணம் ஆகவில்லை. இவையெல்லாவற்றுக்கும் காரணம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுதான் என்றார் சரத் பவார்.

logo
Kalki Online
kalkionline.com