உள்நாட்டிலேயே முடங்கிப் போன சீன அதிபர். இதுதான் காரணமா?

உள்நாட்டிலேயே முடங்கிப் போன சீன அதிபர். இதுதான் காரணமா?

லகம் சுற்றும் வாலிபனாக இருந்த சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் இந்த ஆண்டு எங்குமே வெளியே செல்ல வில்லையாம். முழுவதுமாக உள்நாட்டிலேயே முடங்கிப்போனதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகிறது. 

நீங்கள் சர்வதேச அரசியலை கவனித்து வருபவர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்திருக்கும். சீனாவில் முகமாக பார்க்கப்படும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உலகில் நடக்கும் பல நிகழ்வுகளில் எப்போதுமே தொடர்ச்சியாகக் கலந்து கொள்வார். ஆனால் இந்த ஆண்டு அவர் எங்குமே செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இதுவரை 2023ல், 8 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், வெறும் நாட்கள் மட்டுமே சீனாவுக்கு வெளியே அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த ஆண்டு இரண்டு நாள் பயணமாக தங்களின் அண்டை நாடான ரஷ்யாவுக்கு மட்டுமே சென்றுள்ளார். கடந்த மாதம் ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புதினை நேரில் சந்தித்திருந்தார். இவர் சீன அதிபராக பொறுப்பேற்று பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில், கொரோனா காலகட்டத்தைத் தவிர இவ்வளவு குறைவாக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். 

கொரோனாவுக்கு முன்பு அவர் பல சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 2013 முதல் 2019 வரையிலான காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைந்தது 14 வெளிநாட்டு பயணங்களையாவது மேற்கொண்டு விடுவார். அமெரிக்க அதிபர்களோடு ஒப்பிடுகையில் இது அதிகமான பயணமாகும். அமெரிக்க அதிபர்கள் ஆண்டுக்கு 12 வெளிநாட்டு பயணங்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். 

ஆனால் இப்போதெல்லாம் நேர்மாறாக மாறிவிட்டது. இப்போதும் அவர் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து வந்தாலும், இவர் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களைச் சந்திப்பதற்கு பதிலாக பல தலைவர்களையும் சீனாவுக்கு வரவைத்தே சந்திக்கிறார் ஜி ஜின்பிங். இந்த ஆண்டு மட்டும் இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட மொத்தம் 36 நாட்டு பிரதிநிதிகள் அவரை சீனாவுக்கு வந்து சந்தித்துள்ளனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் கூட பல உலக நாட்டு தலைவர்களுடன் வீடியோ கால் மூலமாக உரையாடி வந்தார். இப்போது அதையும் குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 

அவர் உள்நாட்டிலேயே முடங்கக் காரணம் என்ன? 

இதற்குக் காரணமாகக் கூறப்படுவது சீனாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினைகள்தான். சீன அதிபர் தற்போது உள்நாட்டு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடிவதில்லை. கொரோனாவுக்கு முன்பு வரை சீனாவில் பெரிதாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு பல பிரச்சினைகள் அங்கே அணிவகுத்து நிற்கிறது. 

கொரோனா சமயத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் உள்நாட்டு மக்களே போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானதால் அங்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. நமது ஊரில் போராட்டம் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சீனாவில் மக்கள் போராட்டம் செய்கிறார்கள் என்றால் அது மிகப் பெரிய பிரச்சனையின் விளைவாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல திடீரென சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாயமானார். அவர் ஒரு செய்தியாளருடன் உறவில் இருந்ததால் சீன அரசால் ஓரம்கட்டி மாயமாக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இதனால் அவருடைய கட்சிக்குள்ளேயே பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இதை சமாளிப்பதற்கு தனது உள்நாட்டு தலைவர்களுடன் சீன அதிபர் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது.

இப்படி தன்னுடைய நாட்டிலேயே பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாலேயே உலகம் சுற்றும் வாலிபனாக இருந்த சீன அதிபர் உள்நாட்டிலேயே முடங்கிவிட்டார். இவர் இப்படி முடங்கிக் கிடக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல உலக நாடுகளுக்குப் பயணித்து சீன அதிபரின் ரெக்கார்டை முறியடிக்கப் பார்க்கிறார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com