பிரபல தொழிலதிபர் 'ஜாக் மா' திடீரென பாகிஸ்தான் சென்றது ஏன்?

பிரபல தொழிலதிபர் 'ஜாக் மா' திடீரென பாகிஸ்தான் சென்றது ஏன்?

சீனாவின் தொழில் துறையில் முக்கிய அங்கம் வகித்தவர் ஜாக் மா. தொலைநோக்குப் பார்வை சரியாக இருந்தால், நிச்சயம் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இவரைக் கூறலாம். சில காலமாகவே இவர் அமைதியாக இருக்கும் நிலையில், தற்போது திடீரென பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு காலத்தில் சீனாவின் தொழில்துறை முகம் என்றால் அத் ஜாக் மா தான். தொழில்துறையில் ஆர்வம் இருந்தால் எந்த அளவுக்கு முன்னேறலாம் என்பதை உலகிற்கு காட்ட, சீன அரசாங்கம் ஜாக் மாவைப் பயன்படுத்திக் கொண்டது. இருப்பினும் அவருடைய குறுகிய கால வளர்ச்சிக்கு சீன அரசு மறைமுக ஆதரவு கொடுத்ததும் காரணம் என சிலர் சொல்கின்றனர். ஆனால் எப்போது அவர் சீன அரசுக்கு எதிராக சில சர்ச்சை கருத்துக்களை கூறினாரோ, அப்போதே பிரச்னை வலையில் அவர் சிக்கிக் கொண்டார். 

சீனா வேகமாக வளர வேண்டும் என்றால் சீர்திருத்தங்கள் தேவை என்றும், சீனாவின் வங்கிகள் அடகு கடை போல செயல்படுகிறது எனவும், கடந்த 2020ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியிருந்தார். அதன் பிறகு சீன அரசாங்கம் ஒட்டுமொத்தமாக அவருக்கு எதிராகத் திரும்பியது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவிருந்த அவருடைய Ant என்ற புதிய நிறுவனமும், அதிரடியாக நிறுத்தப்பட்டது. மெல்ல மெல்ல அவர் சார்ந்த பேச்சுகள் காணாமல் போனது. ஒரு கட்டத்தில் அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலை உருவானது. 

சிலர் அவர் சீனாவிலிருந்து வெளியேறி ஜப்பான் சென்று விட்டார் என்றெல்லாம் கூறிய நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக ஜாக் மா பாகிஸ்தான் சென்றுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் முதலீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான முஹம்மது அஸ்பர் அஹ்சனும் இதை உறுதி செய்துள்ளார். 

இந்தப் பயணத்தில் பாகிஸ்தானின் தலைவர்கள், உயரதிகாரிகள், ஊடகத்தினர் என யாரையும் ஜாக் மா சந்திக்கவில்லையாம். ஒரு நாள் மட்டுமே பாகிஸ்தானில் தங்கிவிட்டு மறுநாளே பிரைவேட் செட் மூலமாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். சீனாவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஜெர்மனி, அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் இவருடன் பாகிஸ்தான் சென்றுள்ளனர். உண்மையிலேயே இவர் ஏன் அங்கு சென்றார் என்ற தகவல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. சிலர் அவர் பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கவே அங்கு சென்றார் எனக் கூறுகின்றனர்.  

இருப்பினும், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம், இவருடைய தனிப்பட்ட பயணத்திற்கும் சீன அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com