‘சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு ஏன் முக்கியப் பொறுப்பு வழங்கவில்லை?’ எல்.முருகன் கேள்வி!

‘சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு ஏன் முக்கியப் பொறுப்பு வழங்கவில்லை?’ எல்.முருகன் கேள்வி!
Published on

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமூகநீதி வாரக் கொண்டாட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய எல்.முருகன், '‘பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால பொற்கால ஆட்சியில், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக உலகத் தலைவர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு 11 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்தியா உலக அளவில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

சமூக நீதி என்றால் என்ன? சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலின அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களில் முதலமைச்சருக்கு அடுத்த முக்கியமான துறைகள் பட்டியலின அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் தோல்வி காரணமாகவே வேங்கைவயல் பிரச்னையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்துக்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை; பிரதமர் மோடியின் ஆன்மிக மாடல் ஆட்சியே தேவை' என்று அவர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com