‘சத்தமான தொழுகை ஏன்? அல்லாவுக்குக் காது கேட்காதா?’ பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைப் பேச்சு!

‘சத்தமான தொழுகை ஏன்? அல்லாவுக்குக் காது கேட்காதா?’ பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைப் பேச்சு!

ர்நாடகா மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அம்மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக கட்சி வெற்றி பெறுவதற்கான முக்கிய துருப்புச்சீட்டாக, ‘விஜய் சங்கல்ப்’ யாத்திரையை நடத்தி வருகிறது. இருபது நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு இருக்கும் இந்த யாத்திரையானது இம்மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த விஜய் சங்கல்ப் யாத்திரையில் பங்கு பெற்ற பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மசூதியில் இருந்து தொழுகைக்கான அழைப்பு வந்துள்ளது. அதைக் கேட்ட பிறகு பேசிய ஈஸ்வரப்பா, 'இது பெரிய தலைவலியாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி இருக்கிறார். இன்றோ நாளையோ இப்படி கத்திகொண்டு தொழுகை செய்யும் வழக்கத்துக்கு முடிவுக்கு வரும்' என்று பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 'நம் பிரதமர் மோடி ஒவ்வொரு மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால், நீங்கள் மைக்கில் கத்திக்கொண்டு தொழுதால்தான் அல்லாவுக்குக் கேட்குமா? நாமும்தான் கோயில்களில் பிரார்த்தனை செய்கிறோம், ஸ்லோகங்களை உச்சரிக்கிறோம், நம் பெண்கள் பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால் யாரும் கத்திக்கொண்டு கடவுளை வணங்குவதில்லையே. இவர்கள் மட்டும் மைக் மூலம் இப்படி சத்தமாகக் கத்திதான் வணங்க வேண்டும் என்றால், அல்லா காது கேளாதவர் என்றுதானே சொல்ல முடியும். இப்படித் தொழும் அஸான் வழக்கம் தேவையில்லை. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என நான் கருதுகிறேன்' என்று பேசி உள்ளார். இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஏற்கெனவே கர்நாடகாவை உலுக்கிய ஹிஜாப் பிரச்னையின்போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா, 'வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவி கொடி மாற்றப்படும்' என்று பேசியது பலராலும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com