கணவர் இறந்துவிட்டால் மாமனாரிடம் ஜீவனாம்சம் கோர முடியுமா? நீதிமன்றம் சொல்வதென்ன..?

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கும் கணவரின் கடமை, அவரது மரணத்துடன் முடிவடைவதில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Court order
Court order
Published on

உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம், இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களான இந்த மூன்றும் எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கின்றன தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மற்ற வரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். தன்னைத்தானே காப்பாற்றிகொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்டநிலையில் இருக்கும் ஒரு இந்தியக்குடிமகனுக்கு நம் நாட்டுச்சட்டம் வழி சொல்கிறது.

அந்த வகையில் தான் இந்து சட்டப்படி, ஒரு கணவன் தன் மனைவியைப் பராமரிப்பதற்கான சட்டபூர்வக் கடமை, அவனது மரணத்திற்குப் பின்னரும் முடிவடைவதில்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. தன் மனைவிக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு கணவனின் அடிப்படைப் பொறுப்பானது, அவன் இறந்த பிறகும் கூடத் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது ஒரு விதவை, தனது மறைந்த கணவனின் சொத்துக்களிலிருந்து ஜீவனாம்சம் கோரலாம் என்றும், அந்தச் சொத்துக்கள் போதுமானதாக இல்லாத பட்சத்தில், தனது மாமனாரிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
கோர்ட் அதிரடி தீர்ப்பு..! கணவரை வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளிய மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது..!
Court order

நீதிபதிகள் அரிந்தம் சின்ஹா ​​மற்றும் சத்ய வீர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, அகுல் ரஸ்தோகி என்ற நபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956-ன் படி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கணவனை இழந்த ஒரு பெண் தன்னைத்தானே பராமரித்து கொள்ளமுடியாத சூழலில் இருக்கும்போதும், கணவரின் சொத்துக்கள், பிள்ளைகள் மற்றும் அவர்களின் சொத்துகள், பெற்றோர் சொத்துகள் போன்ற முதன்மை ஆதராங்களில் இருந்து பராமரிப்பை பெறமுடியாத சூழலில், மாமனாருக்குக் குடும்பச் சொத்து மூலம் வருமானம் இருக்கும்பட்சத்தில் அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரலாம் என்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மாமனாரின் பராமரிப்பு வழங்கும் கடமையானது, குறிப்பாக அவரது வசம் உள்ள கூட்டாட்சிச் சொத்துக்கள் (coparcenary property) அல்லது மூதாதையர் சொத்துக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் திருமணத்திற்குப் பிறகு அவரைப் பராமரிக்கும் பொறுப்பு அப்பெண்ணின் தந்தைக்கு இல்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஒரு கணவன் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது அவனது கடமையாகும் என்று நீதிமன்றம் கூறியது. கணவன்-மனைவி பிரிந்து வாழும் சூழலில், குற்றவியல் சட்டங்களின் அடிப்படையிலோ அல்லது இந்து சட்டத்தில் உள்ள ஜீவனாம்சம் தொடர்பான விதிகளின்படியோ மனைவி ஜீவனாம்சம் கோரும்போது, ​​கணவனுக்குரிய இந்தக் கடமை எழுகிறது.

கணவன் இறந்துவிடுவதால் அவனது கடமை முடிவுக்கு வருவதில்லை என்றும், குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அப்பெண்ணுக்குத் தனது மாமனாரிடமிருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அதேசமயம் மருமகள் குடும்ப சொத்தில் தனக்குரிய பங்கை ஏற்கெனவே பெறாத பட்சத்தில் இந்த உரிமை செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தி உள்ள நீதிமன்றம், மாமனார் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!மனைவி சம்பாதித்தாலும் கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும்..!
Court order

ஆனால் அப்பெண் மறுமணம் செய்துகொண்டால், மாமனாரிடம் ஜீவனாம்சம் கோரும் இந்த உரிமை ரத்தாகிவிடும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது நீதிமன்றம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com